தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சிங்கப்பூர் நாணயச் சாலை, எஸ்ஜி60 நினைவுப் பொருள்களின் தொகுப்பை அறிமுகப்படுத்துகிறது.

எஸ்ஜி60 நினைவுப் பொருள்கள் அறிமுகம்

2 mins read
beceefeb-e85e-4ace-adb5-4445d8698df1
சிங்கப்பூர் நாணயச் சாலையின் பதக்க வடிவிலான கைவினைப்பொருள்கள்.  - படம்: சிங்கப்பூர் நாணயச் சாலை

சிங்கப்பூரின் 60வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் எஸ்ஜி60 நினைவுப் பொருள் தொகுப்பைச் சிங்கப்பூர் நாணயச் சாலை அறிமுகம் செய்யவுள்ளது.

நாட்டின் மரபுடைமைத் தலங்கள், மெர்லயன் சிற்பம், சாரோங் கெபாயா உடை ஆகிய மூன்று முக்கியக் கருப்பொருள்களின் அடிப்படையில் அந்த நினைவுப் பொருள்கள் அமைந்திருக்கும்.

பதக்கங்கள், வெள்ளி வார்ப்புகள், தங்கமுலாம் பூசப்பட்ட கலை, கைவினைப் பொருள்கள் போன்ற எஸ்ஜி60 நினைவுப்பொருள்கள், கட்டங்கட்டமாக 2025ம் ஆண்டு முழுவதும் வெளியிடப்படும் என்று வியாழக்கிழமை (மார்ச் 13) வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் நாணயச் சாலை தெரிவித்தது.

அந்த நினைவுப்பொருள்களில் பெரும்பாலானவை ஏற்கெனவே விற்கப்பட்டுவிட்டன அல்லது முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அதன் இணையத்தளம் கூறுகிறது.

சிங்கப்பூர் நாணயச் சாலையின் நினைவுப்பொருள்களைச் சைனாடவுன் பாயின்ட், சன்டெக் சிட்டி கடைத்தொகுதி, தேபான் கார்டன்ஸ் கிரசென்டில் உள்ள நாணயக் காட்சியகம் ஆகிய இடங்களிலும் வாங்கலாம்.

‘சிங்கப்பூரின் மரபுடைமை வட்டாரங்கள் வழியாக உலா’ எனப் பொருள்படும் தொகுப்பில் (Jalan Jalan Through Heritage Districts of Singapore), சாங்கி, ஜூரோங், தியோங் பாரு, தோ பாயோ, குவீன்ஸ்டவுன் ஆகிய ஐந்து மரபுடைமை வட்டாரங்களைக் குறிக்கும் பதக்கங்களும் நூலின் பக்க அடையாள வில்லைகளும் (Bookmark) அடங்கும்.

வெள்ளிப் பதக்கங்களின் ஒரு பக்கம் அந்த இடங்களின் கடந்த காலக் காட்சியும் மறுபக்கம் நிகழ்கால வடிவமும் இடம்பெறுகின்றன.

ஒவ்வொரு வடிவமைப்பிலும் ஈராயிரம் பதக்கங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு பதக்கத்தின் தொடக்க விலை $100.

வட்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகப் பக்க அடையாள வில்லையின் விலை $15.

‘காலத்தால் அழியாத மெர்லயன்’ எனப் பொருள்படும் தொகுப்பில் (Timeless Merlion), சிங்கத் தலை - மீன் உடலைக்கொண்ட மெர்லயன் சின்னம் சார்ந்த பல நினைவுப்பொருள்கள் இடம்பெறுகின்றன.

மூன்றாவது கருப்பொருளில் அமைந்துள்ளவை கெபாயா ஆடை வடிவிலான காந்தம் பொருத்தப்பட்ட நினைவுப்பொருள்கள்.

‘யுனெஸ்கோ’ அமைப்பு 2024ம் ஆண்டில் கெபாயா ஆடையை உலகின் தொட்டுணர முடியாத கலாசார மரபுடைமைப் பட்டியலில் இணைத்தது.

அதற்கான கூட்டு விண்ணப்பத்தைச் சிங்கப்பூர், புருணை, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் செய்திருந்தன.

கெபாயா உடையின் ஏழுவிதத் தனித்துவம் வாய்ந்த வடிவங்களைக் கொண்ட காந்தத் தன்மைகொண்ட நினைவுப்பொருள்களின் தொகுப்பின் தொடக்க விலை $70.

இந்த நினைவுப்பொருள்கள் மார்ச் 21 முதல் 23ஆம் தேதி வரை சேண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் சிங்கப்பூர் அனைத்துலக நாணயக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படும். ஆர்வலர்கள் அங்கே சிறப்பு விலையில் அவற்றை வாங்க இயலும்.

குறிப்புச் சொற்கள்