எஸ்ஜி60: 2025ல் பிறக்கும் குழந்தைகளுக்குச் சிறப்புப் பரிசு

2 mins read
அமைச்சர் இந்திராணி ராஜா அறிவிப்பு
b55a3705-1363-4aad-a9f8-6413bcc4ffe2
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அடுத்த ஆண்டு பிறக்கும் பிள்ளைகளுக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் இந்திராணி ராஜா கூறியுள்ளார். - படம்: பிக்சாபே

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு (2025) பிறக்கும் பிள்ளைகளுக்குச் சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.

அடுத்த ஆண்டுடன் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடையவிருக்கின்றன. அதை முன்னிட்டு இந்தச் சிறப்புப் பரிசு வழங்கப்படுவதாகப் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா அறிவித்துள்ளார்.

நவம்பர் 5ஆம் தேதி ஃபேஸ்புக்கில் அமைச்சர் இதுகுறித்துப் பதிவிட்டார். ஆனால் மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை.

சிங்கப்பூர் வரலாற்றில் மைல்கல்லாகக் கருதப்படும் 2025ஆம் ஆண்டு, சிங்கப்பூரர்களின் அடிப்படை விழுமியங்களைக் கொண்டாடும் ஆண்டாக அமையும் என்றார் அமைச்சர். குறிப்பாக, வெவ்வேறு இன, சமய, பின்னணிகளைக் கொண்ட சிங்கப்பூரர்கள் ஒரே குடும்பமாகத் தங்களைக் கருதும் ஒப்பற்ற பண்பை அமைச்சர் சுட்டினார்.

“வரும் ஆண்டுகளிலும் சிங்கப்பூர் வலிமையோடும் செழிப்போடும் திகழ, கூடுதலான எண்ணிக்கையில் சிங்கப்பூர்க் குடும்பங்கள் தேவை. சிங்கப்பூர்க் குடியுரிமை கொண்ட குழந்தைகள் தேவை. சிங்கப்பூர்க் கதையின் அடுத்த அத்தியாயத்தை எழுத அது அவசியம்,” என்று குமாரி இந்திராணி ராஜா கூறினார்.

“நாட்டின் வருங்காலத்திற்குத் திருமணம், மகப்பேறு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக சிங்கப்பூர் அதன் 60ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் அடுத்த ஆண்டு பிறக்கும் எஸ்ஜி60 பிள்ளைகளுக்குச் சிறப்புப் பரிசை வழங்கத் திட்டமிடுகிறோம்,” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் லாரன்ஸ் வோங், திங்கட்கிழமை (நவம்பர் 4) நடைபெற்ற மக்கள் கழக நிகழ்ச்சியில் எஸ்ஜி60 கொண்டாட்டங்களைத் தொடங்கிவைத்துப் பேசியபோது, “எஸ்ஜி60 நாம் அனைவரும் சிங்கப்பூருக்கான கடப்பாட்டைப் புதுப்பித்துக்கொண்டு, மேம்பட்ட எதிர்காலத்தை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்லும் காலகட்டமாக விளங்கும்,” என்று கூறினார்.

ஒன்றிணைந்து சிங்கப்பூரைக் கட்டியெழுப்புவோம் என்ற கருப்பொருளில் அடுத்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். இன, சமய நல்லிணக்க மாதம், எக்ஸ்போ 2025 ஒசாக்காவில் சிங்கப்பூர் பெவிலியன், சிங்கப்பூர் சிற்பிகள் நினைவகத்தின் ‘புரோஜெக்ட் சிட்டிசன்ஸ் - த ஃபர்ஸ்ட் மில்லியன்’ போன்றவை அவற்றில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்