எஸ்ஜி60ஐ முன்னிட்டு, இவ்வாண்டு ஜூலை மாதம் 21 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்களுக்கு $600 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
60 வயதுக்கும் மேற்பட்ட மூத்தோருக்கு $800 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
இதுகுறித்த விவரங்களை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) வரவுசெலவுத் திட்ட தாக்கலின்போது பிரதமர் லாரன்ஸ் வோங் வெளியிட்டார்.
அனைத்துச் சிங்கப்பூரர்களின் பங்களிப்பை அடையாளம் கண்டு நாட்டின் வளர்ச்சி மூலம் கிடைத்த அனுகூலங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக திரு வோங் கூறினார்.
ஒட்டுமொத்தமாக, ஏறத்தாழ மூன்று மில்லியன் பேருக்கு எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள் கிடைக்கும் என்று நிதி அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
பற்றுச்சீட்டுகளை மூத்தோர் முதலில் பெறுவர்.
எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள் சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் போன்றவை என்று நிதி அமைச்சருமான திரு வோங் தெரிவித்தார்.
அவற்றை சிங்பாஸ் மூலம் ‘ரிடீம்எஸ்ஜி’ தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
சிடிசி பற்றுச்சீட்டுகளை ஏற்கும் அனைத்துக் கடைகளிலும் எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.
வழங்கப்படும் எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளில் பாதியை திட்டத்தில் பங்கேற்கும் பேரங்காடிகளில் பயன்படுத்தி பொருள்களை வாங்கலாம்.
எஞ்சிய பற்றுச்சீட்டுகளை குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள கடைகளிலும் உணவு அங்காடி நிலையங்களிலும் பயன்படுத்தலாம்.
எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளுக்காக அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள செலவு தோராயமாக $2.02 பில்லியன்.
இந்நிலையில் 2025ஆம் ஆண்டு மே மாதத்துக்கும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு புதிதாக $800 பெறுமானமுள்ள சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
இதற்காக ஏறத்தாழ $1.06 பில்லியன் தொகையை அரசாங்கம் செலவழிக்க இருக்கிறது.
வரி செலுத்தும் சிங்கப்பூர்வாசிகளுக்குத் தங்கள் தனிநபர் வருமான வரியில் 60 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்றும் பிரதமர் வோங் கூறினார்.
கழிவுக்கான வரம்பு $200.
இது 2024ஆம் ஆண்டுக்கான வருமானத்துக்குரியது.
இந்த வரிக் கழிவு பெரும்பாலும் நடுத்தர வருமான ஊழியர்களுக்குப் பயனுடையதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
2025ஆம் ஆண்டில் பிறக்கும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் எஸ்ஜி60 குழந்தை அன்பளிப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா முன்பே அறிவித்திருந்தார்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் பிரதமர் அலுவலக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது வெளியிடப்படும்.