பங்குச்சந்தையை ஊக்குவிப்பதற்கான உத்தேச நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பு வெளியான மறுநாளான வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) சிங்கப்பூர் பங்குச் சந்தையின் பங்குகள் 5.8 விழுக்காடு சரிந்து $12.69க்குக் குறைந்தது.
மந்தமாக இருக்கும் பங்குச் சந்தை வர்த்தகத்தை மீட்டெடுக்க சிங்கப்பூர் நாணய ஆணையம் வழிநடத்தும் மறுஆய்வுக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
அதிகமான நிறுவனங்களும் நிதி மேலாளர்களும் சிங்கப்பூர் பங்குச் சந்தைக்குள் நுழைவதை ஊக்குவிக்க வரிக் கழிவுகள் வழங்குவது உள்ளிட்ட சலுகைகளை அந்தக் குழு பரிந்துரைத்தது.
வளர்ச்சி மூலதனத்தை சிங்கப்பூரிலேயே எளிதாகப் பெறும் வகையில் உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவும் நோக்கத்தில் உத்தேசத் திட்டங்களை குழு வகுத்தது.
இருப்பினும், உத்தேசத் திட்டங்களின் முழு விவரங்களை ஆணையம் வெளியிடவில்லை. ஆணையக் குழுவின் யோசனைகள் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், சிங்கப்பூர் பங்குச் சந்தையின் பங்கு விலை சரிவடையும் என்று ‘சிட்டி’யின் (Citi) பகுப்பாய்வாளர் டான் யோங் ஹோங் முன்னுரைத்துள்ளார்.
12 மாத வர்த்தகத்தில், பங்கு ஒன்றின் விலை இதற்கு முன்னர் அடைந்த $13.10 என்னும் உச்சத்தில் இருந்து 9 விழுக்காடு சரிந்து $11.90ஐத் தொடும் என்பது அவரது கணிப்பு.