எஸ்ஜிஎக்ஸ் எனும் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை, பங்குகளிலும் மற்ற நிதி வர்த்தகப் பத்திரங்களிலும் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்சத் தொகையைக் குறைப்பதற்கு முன்மொழிந்துள்ளது.
முதலீடு செய்ய விரும்பும் இளையர்களை உள்ளூர்ப் பங்குச் சந்தையின் பக்கம் ஈர்ப்பதற்கு அது உதவும் என்று நம்பப்படுகிறது.
தற்போது முதலீடு செய்ய விரும்புவோர், ஒரு நிறுவனத்தின் குறைந்தது 100 பங்குகள் அடங்கிய தொகுப்பைத்தான் வாங்க முடியும். அவற்றைக் குறைத்து, 10 பங்குகள் அடங்கிய தொகுப்பாக வாங்க வழிசெய்யும் யோசனையை எஸ்ஜிஎக்ஸ் இப்போது முன்வைத்துள்ளது. $10க்கும் $100க்கும் இடைப்பட்ட பங்குகளுக்கு அது பொருந்தும். $100க்கும் மேற்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, தொகுப்பில் நூறு பங்குகளுக்குப் பதிலாக ஒன்று இருந்தாலே போதுமானது.
பங்குகளுக்கும் அப்பால் மற்ற நிதி வர்த்தகப் பத்திரங்கள், சொத்து முதலீட்டுப் பத்திரங்கள், நிறுவன உத்தரவாதப் பத்திரங்கள் முதலியவற்றுக்கும் புதிய மாற்றங்கள் பொருந்தும்.
பரிந்துரைகள் அடங்கிய ஆலோசனை அறிக்கையை எஸ்ஜிஎக்ஸ் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) வெளியிட்டது. முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளால் அதிக விலையுள்ள பங்குகளை வாங்குவது எளிதாகும் என்றும் முதலீட்டாளர்கள் அவற்றை வாங்க முன்வருவர் என்றும் அது நம்பிக்கை தெரிவித்தது. அதனால் கூடுதலான முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் நுழைவார்கள் என்று கூறிய எஸ்ஜிஎக்ஸ், வர்த்தக நடவடிக்கைகளும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டது.
பெரிய பங்குகள் சிலவற்றின் விலைகள் அண்மைக் காலத்தில் கணிசமாகக் கூடியிருப்பதாக எஸ்ஜிஎக்ஸ் குழுமத்தின் பங்குப் பிரிவுத் தலைவர் இங் யாவ் லூங் தெரிவித்தார்.
“வர்த்தக நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட 30 விழுக்காடு, $10க்கும் மேற்பட்ட பங்குகளிலிருந்து வருகிறது. இந்தப் பிரிவில்தான் அதிகமானோரை ஈர்த்துப் பங்கெடுப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறோம்,” என்று அவர் சொன்னார்.
“ஒரு தொகுப்பில் உள்ள பங்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம், குறைந்தபட்ச முதலீட்டைச் சில ஆயிரம் வெள்ளியிலிருந்து சில நூறு வெள்ளிக்குக் குறைக்கமுடியும். அதன்வழி கூடுதலானோரை முதலீடு செய்ய ஈர்க்க முடியும் - குறிப்பாக இளம் முதலீட்டாளர்களை,” என்றார் திரு இங்.
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர்ப் பங்குச் சந்தையை வலுவாக்கும் நோக்கத்துடன் சிங்கப்பூர் நாணய ஆணையம் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பங்குச் சந்தை மறுஆய்வுக் குழுவை நிறுவியது. அதன் பரிந்துரைகளின் ஒரு பகுதியாகத் தற்போதைய ஆலோசனை அறிக்கையும் சேர்ந்துகொண்டுள்ளது.
ஆலோசனை அறிக்கை குறித்துப் பொதுமக்கள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 13ஆம் தேதிக்குள் கருத்துகளைக் கூறலாம்.
பங்குச் சந்தை ஆதரவளித்தால் புதிய மாற்றங்கள் இவ்வாண்டு (2026) நடுப்பகுதியில் நடப்புக்கு வரும் என்று எஸ்ஜிஎக்ஸ் தெரிவித்தது.

