சிங்கப்பூரின் நீண்டகால முஃப்தி ஷேக் சையது ஈசா செமயிட் காலமானார்

2 mins read
e98116f7-bbcd-4a22-b944-2bf45cd03ae5
ஷேக் சையது ஈசா செமயிட், 1972 முதல் 2010 வரை முஃப்தியாக பதவி வகித்தார். - கோப்புப் படம்: பெரித்தா ஹரியான்

சிங்கப்பூரின் நீண்டகால முஃப்தியாக பணியாற்றிய ஷேக் சையது ஈசா செமயிட் திங்கட்கிழமை (ஜூலை 7) தமது 87வது வயதில் காலமானார்.

சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றில், “ஒரு மூத்த சமய அறிஞரும் தலைவருமானவரின் மறைவு ஆழ்ந்த சோகம் அளிக்கிறது,” என்று தெரிவித்ததுடன், அவரது மறைவு “சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஒரு பேரிழப்பு” என்றும் கூறியது.

ஷேக் சையது ஈசா தமது 33வது வயதில் முஃப்தியாக நியமிக்கப்பட்டார். அவர் 1972 முதல் 2010 வரை இந்தப் பதவியை வகித்தார்.

முஃப்தியாக, அவர் கல்வியின் தீவிர ஆதரவாளராகவும் பல்வேறு சமயங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் ஒரு முக்கிய நபராகவும் இருந்தார். அவரது பதவிக்காலத்தில், முஸ்லிம் சமூகத்தின் சமய வாழ்க்கையை மேம்படுத்த உதவிய பல முக்கிய அமைப்புகள் நிறுவப்பட்டதாக முயிஸ் தெரிவித்துள்ளது.

பீஷானில் உள்ள அன் நஹ்தா பள்ளிவாசலில் அமைந்துள்ள நல்லிணக்க நிலையத்தைப் பல சமயங்களுக்கிடையேயான ஈடுபாடு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான ஒரு மையமாக உருவாக்குவதற்கும், தொண்டு மற்றும் மனிதாபிமானப் பணிகளை ஆதரிக்கும் ரஹ்மத்தன் லில் ஆலமின் அறநிறுவனம் அமைக்கப்படுவதற்கும் அவர் ஆதரவளித்தார். ஷேக் சையத் இசாவின் இறுதிச் சடங்குக்குச் சென்ற மூத்த அமைச்சர் லீ சியன் லூங், ஷேக் சையத் இசா, சிறந்த சிங்கப்பூரர் என்று வர்ணித்தார். “அவர் பல ஆண்டுகளாக சிறுபான்மை உரிமைகளுக்கான அதிபர் மன்றம் மற்றும் சமய நல்லிணக்கத்திற்கான அதிபர் மன்றம் ஆகியவற்றில் சேவையாற்றியது உட்பட பல பாத்திரங்களை வகித்துள்ளார்,” என்று கூறினார்.

சவாலான, சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டறிவதில் ஃபத்வா குழுவை ஷேக் சையது ஈசா வழிநடத்தினார் என்றும் முயிஸ் குறிப்பிட்டது.

ஷேக் சையது ஈசாவின் ஞானமும் தலைமைத்துவமும் ‘ஒரு முற்போக்குச் சிந்தனையுள்ள, தன்னம்பிக்கை கொண்ட முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதில் காரணமாக’ இருந்ததாக முயிஸ் தனது அறிக்கையில் பாராட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்