முக்கியமான விவகாரங்களைப் பற்றிப் பேசுவதே ஷங்ரிலா கலந்துரையாடல் போன்ற பாதுகாப்பு மாநாடுகளின் வெற்றியை மதிப்பிடும் அளவுக்கோல் என்று சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார்.
அவரைப் பொறுத்தவரை மே 31 முதல் ஜூன் 2 வரை இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல், ஒரு வெற்றி.
தென்சீனக் கடல், தைவானின் சுதந்திரம் ஆகியவை தொடர்பில் நிலவிவரும் சிக்கலான எல்லை விவகாரங்கள் குறித்து வெளிப்படையான, ஆரோக்கியமான, உயர் மட்ட அளவிலான கலந்துரையாடல்கள் நடந்ததாக அவர் சுட்டினார்.
நிகழ்வின் இறுதி நாளன்று செய்தியாளர்களிடம் பேசினார் டாக்டர் இங்.
இத்தகைய மாநாடுகள், திட்டவட்டமான விளைவுகளை நாடி நடத்தப்படும் இருதரப்பு, பலதரப்பு பேச்சுவார்த்தைகள் போன்றதல்ல என்றார் அவர்.
அதற்குப் பதிலாக, சிக்கலான விவகாரங்கள் தொடர்பில் மேலும் ஆழமான புரிதலை, 2024 ஷங்ரிலா கலந்துரையாடலில் பங்கேற்ற தற்காப்பு மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் பெற்றிருப்பர்.
கலந்துரையாடல் இறுதி நாளின் ஏழாவது அமர்வில் பேசிய டாக்டர் இங், பங்கேற்பாளர்களுக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
கலந்துரையாடலில் ஈடுபட்டு, செவிசாய்ந்து, சிலசமயம் வாய்ச் சண்டை போடவும் தயாராக இருந்ததை அவர் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
ஷங்ரிலா கலந்துரையாடல் இவ்வாண்டு 21ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட டாக்டர் இங், அது முதிர்ச்சி கண்டுள்ளதாகக் கூறினார்.
“அதில் யதார்த்தம் சற்று கூடியுள்ளது, லட்சியநோக்கு குறைந்துள்ளது, ஆனால் நடைமுறைச் சிந்தனை அதிகரித்துள்ளது,” என்றார் அவர்.
ஷங்ரிலா கலந்துரையாடலின் புகழ் அதிகரித்துவருவதிலும் நன்மை உண்டு என்றார் டாக்டர் இங்.
தங்களின் தலைவர்களும் தற்காப்பு அதிகாரிகளும் நிகழ்வில் பேச மேலும் அதிக நாடுகள் வாய்ப்பு நாடுவதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு பேசும் வாய்ப்புக்கான தேவை அதிகரிப்புக்கு ஈடுகொடுக்க, 2024ஆம் ஆண்டின் நிகழ்வில் கூடுதல் சிறப்பு அமர்வுகள் சேர்க்கப்பட்டதாக டாக்டர் இங் தெரிவித்தார்.

