தொகுதியில்லா எம்.பி. லியோங் மன் வாயைச் சாடிய அமைச்சர் சண்முகம்

2 mins read
07e1eec0-05c0-4f34-9f9b-df31cfe94832
திரு லியோங் மன் வாய் நாடாளுமன்றத்தில் இனவாத கருத்துகளை உரைத்ததாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

சிங்கப்பூரின் பல இன அணுகுமுறைக்கு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் சாடியுள்ளார்.

திரு லியோங் இனவாதக் கருத்துகளைத் தெரிவிக்கும் பழக்கம் கொண்டவர் என்றும் அமைச்சர் சண்முகம் புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த திரு லியோங், பொது வீடமைப்புக்கான இன ஒருங்கிணைப்புக் கொள்கைகளுக்கு எதிராக தாம் உரைத்த கருத்துகள் பொருளியல் அடிப்படையிலானவை என்று கூறினார்.

சீனர்-மலாய்க்காரர்-இந்தியர்-பிற இனத்தவர் என்ற நாட்டின் கட்டமைப்பை மறுஆய்வு செய்வது குறித்து அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி பற்றி திரு லியோங் கேள்வி எழுப்பியிருந்தார்.

சிங்கப்பூரின் பல இனச் சூழல் மாறி வருவதாகவும் இந்தக் கட்டமைப்பு சீரான இடைவெளியில் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்திருந்ததைச் சுட்டிய திரு லியோங், இதுதொடர்பாகவே தமது கேள்வி அமைந்திருந்ததாகக் கூறினார்.

ஆனால், திரு லியோங் இத்தகைய கேள்வி எழுப்பியதற்கான உண்மையான காரணம் குறித்து அமைச்சர் சண்முகம் கேள்வி எழுப்பினார்.

சீனர்-மலாய்க்காரர்-இந்தியர்-பிற இனத்தவர் என்ற நாட்டின் கட்டமைப்பு தொடர்பாகத் தாமும் அமைச்சர் டோங்கும் கொண்டிருக்கும் பார்வையிலிருந்து திரு லியோங்கின் பார்வை வித்தியாசமானது என்று அவர் கூறினார்.

பொது வீடமைப்புக்கான இன ஒருங்கிணைப்புக் கொள்கை 1989ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புக் கட்டடத்திலும் குடியிருப்புப் பேட்டையிலும் ஒவ்வோர் இனத்தவரின் எண்ணிக்கைக்கு அதன்கீழ் வரம்பு விதிக்கப்படுகிறது.

ஒரே குடியிருப்புக் கட்டடத்தில் அல்லது குடியிருப்புப் பேட்டையில் குறிப்பிட்ட இனத்தவர்கள் மட்டும் பேரளவில் இருப்பதைத் தவிர்க்க இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீவக வீடுகளில் வசிப்பது குறித்து திரு லியோங் முன்பு தெரிவித்திருந்ததை அமைச்சர் சண்முகம் நினைவுகூர்ந்தார்.

சிங்கப்பூரர்கள் வேறு வழியில்லாமல் வீவக வீட்டில் வசிக்கின்றனர் என்று திரு லியோங் கூறியிருந்ததை அமைச்சர் சண்முகம் சுட்டினார்.

சிங்கப்பூர்வாசிகளில் 80 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டோர் வீவக வீடுகளில் வசிக்கின்றனர் என்று வீவகவின் இணையத்தளம் தெரிவிக்கிறது.

திரு லியோங் நாடாளுமன்றத்தில் இனவாத கருத்துகளை உரைத்ததாகவும் திரு சண்முகம் கூறினார்.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முழுமையான பொருளியல் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை திரு லியோங் விமர்சித்திருந்ததை திரு சண்முகம் நினைவுகூர்ந்தார்.

இதுதொடர்பாக, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நாடாளுமன்றம் கூடியபோது தமக்கும் திரு லியோங்கிற்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

அந்த ஒப்பந்தம் குறித்து திரு லியோங் தெரிவித்த கருத்துகள் அவரது கட்சியினரையும் முகம் சுழிக்க வைத்ததாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

திரு லியோங்கின் கருத்துகள் இந்தியச் சமூகத்துக்கு எதிராக இருந்ததாக திரு லியோங்கின் சிங்கப்பூர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கருதியதாக ஊடகம் செய்தி வெளியிட்டிருந்ததை திரு சண்முகம் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்