சிங்கப்பூரில் பாலியல் குற்றங்களைக் குறைப்பதில் உறுதியான பலன் தருமானால், ஆண்ட்ரோஜன் எதிர்ப்பு மருந்துகளை போன்ற மருந்துகளைப் பயன்படுத்தி பாலுணர்வைக் குறைக்கும் முறையைப் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகப் பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கும் இளையவருக்கும் எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு, பாலியல் உணர்வைக் கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் மற்றும் பாலியல் குற்றவாளிகளுக்கான பதிவேடு போன்ற நடவடிக்கைகளை உள்துறை அமைச்சு மதிப்பீடு செய்துள்ளதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் சியாம் செப்டம்பர் 8ல் எழுப்பிய எழுத்துபூர்வக் கேள்விக்கு தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான சண்முகம் பதிலளித்தார்.
பாலியல் குற்றங்களை அரசாங்கம் மிகத் தீவிரமாகக் கருதுவதாகவும் குறிப்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்களாக இருக்கும் பட்சத்தில் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
14 வயதுக்குட்பட்ட சிறுவரின் ஒப்புதலின்றி அவருடன் பாலியல் உறவு கொள்ளும் குற்றத்துக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
14 வயதுக்குட்பட்ட சிறுவருக்குப் பாலியல் தொல்லை அளித்தால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை, அபராதம், பிரம்படி ஆகிய தண்டனைகள் உள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுவருக்குக் காயம் ஏற்படுத்தப்பட்டாலோ அல்லது அவர் முடக்கப்பட்டாலோ 10 ஆண்டுகள் வரை சிறையும் பிரம்படியும் விதிக்கப்பட முடியும். கடந்த ஆண்டுகளில் பல சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களைப் பாலியல் துன்புறுத்தலிலிருந்து பாதுகாக்க புதிய குற்றவியல் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது.
2021ல் பாலியல் தொல்லைக்கான அதிகபட்சச் சிறைத் தண்டனை உயர்த்தப்பட்டது. மேலும், கடந்த ஜூலை மாதம் அமலுக்கு வந்த பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தண்டனைச் சட்டத்தின்படி, கடுமையான வன்முறைப் பாலியல் குற்றவாளிகள் பொதுமக்களுக்கு இனி ஆபத்தில்லை என மதிப்பிடப்பட்டால் மட்டுமே விடுவிக்கப்படுவர்.
குற்ற விகிதத்தைக் குறைக்க உறுதியான சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில் மருந்துகள் மூலம் பாலுணர்வைக் குறைப்பது போன்ற முறைகளைப் பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இருந்தாலும், அதற்கான சான்றுகள் இன்னும் தீர்க்கமாக இல்லை என அமைச்சர் சண்முகம் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூரில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 762 மானபங்க வழக்குகளும் 261 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பதிவாகியுள்ளன.


