தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பொஃப்மா உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சிஜக) செய்த மேல்முறையீட்டை உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் நிராகரித்து விட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அது தொடர்பாக அமைச்சு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
தடை செய்யப்பட்ட பகுதியில் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்த மூன்று பெண்கள் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் பொய்யுரைக்கப்பட்டு இருந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, தடை செய்யப்பட்ட இஸ்தானா வட்டாரத்திற்குள் அனுமதி இன்றி ஊர்வலம் நடத்தப்பட்டதால் அந்தப் பெண்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சு விளக்கியுள்ளது.
அந்த விவகாரத்தில், மொசாம்மாட் சொபிக்குன் நஹார், 25, சித்தி அமிரா முஹம்மது அஸ்ரோரி, 29, அண்ணாமலை கோகில பார்வதி, 35, ஆகியோர் மீது கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், அந்தச் சட்ட நடவடிக்கை தனக்கு ஏற்புடையது அல்லாத கருத்துகளையும் செயல்களையும் சகித்துக்கொள்வதில் அரசாங்கத்தின் இயலாமையைக் காட்டுவதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி தனது அறிக்கையில் கூறியிருந்தது.
அதனை மறுத்த உள்துறை அமைச்சு, அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பொய் என்பதால் அந்தக் கட்சிக்கு எதிராக, பொஃப்மா எனப்படும் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறியது.
“பெண்கள் தெரிவித்த கருத்துகளுக்காகவோ அல்லது அவர்களின் கருத்துகள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டோடு ஒத்துப்போகவில்லை என்பதற்காகவோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
“மாறாக, அனுமதிக்கப்படாத இஸ்தானா வட்டாரத்தில் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்ததற்காக பொது ஒழுங்குச் சட்டத்தின்கீழ் அவர்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டது,” என்று அமைச்சு விளக்கியுள்ளது.
முதலில் பொஃப்மா திருத்த உத்தரவுக்கு இணங்கிய சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சில அம்சங்கள் குறித்து தெளிவுபெற வேண்டி உள்ளதால் உத்தரவில் மாற்றம் கோரி விண்ணப்பித்து உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக, பொஃப்மா உத்தரவில் மாற்றம் செய்ய திரு சண்முகம் இணங்காவிட்டால் விவகாரத்தை உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப் போவதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) தனது ஃபோஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தது.