தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சண்முகம்: நல்லிணக்கம் பேணுவதில் சமயத் தலைவர்களுக்குத் தலையாய பங்கு

3 mins read
4e6b6b08-3f07-4057-9218-982fab27080e
கரையோரப் பூந்தோட்டங்களில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) நடைபெற்ற கிறிஸ்து சேகர சபையின் 85ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் சிறப்புரையாற்றினார். - படம்: கி.ஜனார்த்தனன்

சமயச் சார்பற்ற சிங்கப்பூரில் சமயம் அரசியல்மயமாக்கப்படுவது ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்று தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

அதே நேரத்தில், சமூகத்தில் இன்றியமையாத பங்காற்றும் சமயக் குழுக்களுக்கு அரசாங்கம் மதிப்பளித்து, அவற்றுடன் இணைந்து செயல்படுவதாக அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.

கரையோரப் பூந்தோட்டங்களில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) நடைபெற்ற கிறிஸ்து சேகர சபையின் 85ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தைச் சிறப்பித்த திரு சண்முகம், தமது உரையின்போது இவ்வாறு கூறினார். 

இருந்தபோதும், நல்லிணக்கம் என்பது இயல்பாகவே நிலைத்துவிடாது என்றும் அதனை மெத்தனமாகக் கருதிவிடக்கூடாது என்பதை இதுபோன்ற ஆண்டுநிறைவுக் கொண்டாட்டங்கள் நினைவுபடுத்துகின்றன என்றும் அவர் சொன்னார்.

சமய நல்லிணக்கம் தொடர்பான  மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட சிங்கப்பூரின் அணுகுமுறையை அமைச்சர் சண்முகம் கோடிட்டுக்காட்டினார். 

சமயச் சார்பற்ற நாட்டுடன் சமயங்களிடையே சமத்துவம், பன்னாட்டுச் சமய சமூகம் ஆகியவையே அந்தக் கொள்கைகள் என அவர் குறிப்பிட்டார்.

“எல்லாருக்குமான பொது இடங்கள், சமயங்களுக்கு இடையே இருபக்க மதிப்பு. இந்தக் கோட்பாடுகளைச் சட்டம், கொள்கை வகுப்பு, செயலாக்கம் வழியாக ஆதரிக்கிறோம்,” என்றார் திரு சண்முகம்.

சிங்கப்பூர் சிறைத்துறையில் தேவாலயங்கள் மேற்கொள்ளும் மறுவாழ்வுப் பணிகளை அவர் சுட்டிக்காட்டினார்.

நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, மரியாதை ஆகியவற்றைச் சட்டத்தின்மூலம் கட்டாயப்படுத்த முடியாது என்பதால் இங்கு சமய, சமூகத் தலைவர்களுக்குத் தலையாய பங்கு இருப்பதாக அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.

“நடத்தையை நீங்கள் முடிவுசெய்யுங்கள். உங்கள் சபையினர்க்கு வழிகாட்டுங்கள். தனிமனிதர்களையும் நாட்டையும் நம்பிக்கை எப்படி வலுப்படுத்தும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருங்கள்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மோல்மென் கெய்ர்ன்ஹில் நல்லிணக்க வட்டத்தில் தேவாலயம் இதனைச் செய்து வருவதாக அவர் சொன்னார்.

சமூகங்கள் பிறர்க்குச் சேவையாற்றும்போது நன்னம்பிக்கையும் புரிந்துணர்வும் மலர்ந்து, அதனால் நம் சமூகக் கட்டமைப்பு வலுவடைகிறது என்றும் திரு சண்முகம் கூறினார்.

புதுப்பிக்கப்பட்ட தேவாலயத் துணைக் கட்டடமான கேனன் அருள்திரு சாமுவெல் பாபு புளோக், தேவாலயத்தின் பணியை வருங்காலத்தில் தொடர்ந்து ஆற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய வளர்ச்சி மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான், பேராயர் டாக்டர் டைட்டஸ் சுங் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இரவு விருந்தில் ஏறத்தாழ 600 பேர் பங்கேற்றனர்.  

தழைத்துவரும் இறைச்சேவை 

1940ல் நிறுவப்பட்ட கிறிஸ்து சேகர சபை, சிங்கப்பூர்ச் சமூகத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொண்டாற்றி வருகிறது.

“இது சிங்கப்பூரின் முதல் தமிழ் தேவாலயம். நிலைக்கல் நாட்டப்பட்ட நாளை ஒட்டி நாங்கள் 85ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாடுகிறோம்,” என்று தேவாலயத்தின் தலைமை போதகர் அருள்திரு கேனன் ஸ்டீஃபன் ஆசிர்வாதம் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு அமைக்கப்பட்ட தேவாலயக் கட்டடம், போரின்போது ஏற்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. எனினும், அந்தக் கட்டடத்தை அன்பர்கள் புதுப்பித்த பிறகு தற்போது அது பாதுகாக்கப்பட்ட கட்டடமாகத் திகழ்கிறது.

போரின்போது கல்வி தடைபட்ட மாணவர்களுக்காக அன்றைய மூத்த போதகர் கேனன் சாமுவெல் பாபு, அந்த வளாகத்தில் தனியார் பள்ளி ஒன்றைத் தொடங்கியதையும் அருள்திரு ஸ்டீஃபன் குறிப்பிட்டார். 

“அவர் தொடங்கிய பள்ளியை இந்நாட்டு அரசு பின்னர் அங்கீகரித்தது. கிறைஸ்ட் சர்ச் உயர்நிலைப் பள்ளியாக அது இன்றளவும் செயல்படுகிறது,” என்று அவர் கூறினார்.

1980களில் தொடங்கப்பட்ட தேவாலய பாலர் பள்ளி, தற்காலக் கல்வி முறையின்படி தமிழ் கற்பித்த முன்னோடிப் பள்ளி என்றும் கூறப்படுகிறது. 

“85 ஆண்டுகளாக, சுதந்திர காலத்திற்கு முன்பிருந்தே இயங்கிவரும் தமிழ்ச் சபை இது. வேற்றுமொழி பேசும் இந்தியர்களும் இறையாராதனை செய்யக்கூடிய தலமாக ஆலயம் திகழ்கிறது,” என்று அருள்திரு ஸ்டீஃபன் பெருமையுடன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்