தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்கள் அனுதாபத்தைப் பெற டெரி ஸு முயல்வதாக அமைச்சர்கள் குற்றச்சாட்டு

2 mins read
27bbbccb-29e8-4b64-abb8-b97d9101937d
அமைச்சர்கள் கா. சண்முகமும் டான் சீ லெங்கும் ஒரு கட்டுரை தொடர்பில் ‘தி ஆன்லைன் சிட்டிசன்’ (டிஓசி) ஆசிரியர் டெரி ஸு மீது அவதூறு வழக்குத் தொடுத்துள்ளனர். - கோப்புப் படம்: சிஎன்ஏ ஊடகம்

‘தி ஆன்லைன் சிட்டிசன்’ (டிஓசி) சமூக, அரசியல் இணையத் தளத்தின் ஆசிரியரான டெரி ஸு தமக்கு எதிரான அவதூறு வழக்கில் சிங்கப்பூரர்களின் ஆதரவையும் அனுதாபத்தையும் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் சண்முகமும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மார்ச் 28ஆம் தேதி நீதிமன்றத்திலிருந்து பெற்ற ஆவணங்களிலிருந்து இது தெரியவருவதாக சிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

திரு ஸு என்று அழைக்கப்படும் ஸு யுவான்சென்னுக்கு எதிராக இவ்வாண்டு ஜனவரி 6ஆம் தேதி இரு அமைச்சர்களும் அவதூறு வழக்குத் தொடுத்தனர். இதையடுத்து இது தொடர்பான நீதிமன்ற ஆவணங்களை தைவானில் உள்ள ஸுவிடம் கொடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சிங்கப்பூரின் உயர்தர பங்களா பரிவர்த்தனைகள் பற்றி டிசம்பர் 12ல் “சிங்கப்பூர் மாளிகை தொடர்பான ஒப்பந்தங்கள் அதிகளவு ரகசியமாக செய்யப்படுகின்றன,” என்ற தலைப்பில் புளூம்பர்க் கட்டுரை வெளியிட்டிருந்தது.

அதனை சுட்டிக்காட்டி கருத்துடன் அதே கட்டுரையை ‘தி ஆன்லைன் சிட்டிசன்’ வெளியிட்டதால் அவதூறு வழக்கை அது எதிர்நோக்குகிறது.

இரு அமைச்சர்களும் புளூம்பர்க் மற்றும் அதன் செய்தியாளர்மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளனர்.

திரு டானையும் திரு சண்முகத்தையும் மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங், டேவிட் ஃபோங், திருவாட்டி சாம்பவி ராஜாங்கம், திரு ஆடம் லாவ் ஆகியோர் அடங்கிய வழக்கறிஞர் குழு பிரதிநிதிக்கிறது.

‘தி ஆன்லைன் சிட்டிசன்’ (டிஓசி) ஆசிரியர் ஸு, அமைச்சர் ஒருவரிடமிருந்து சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வது இது முதன்முறையன்று.

இதற்கு முன்பு, அப்போதைய பிரதமர் லீ சியன் லூங்கும் அவரது உடன்பிறந்தவர்களுடனான எண் 38, ஆக்ஸ்லி ரோடு சொத்து தொடர்பான பிரச்சினையைக் குறிப்பிட்டு கட்டுரை வெளியிட்டதற்காக திரு ஸு மீது அவதூறு வழக்குத் தொடுத்திருந்தார்.

அப்போது சிங்கப்பூரில் இருந்த திரு ஸு அவதூறு வழக்கில் தோல்வியடைந்து திரு லீக்கு 210,000 வெள்ளி இழப்பீடு தருமாறு செப்டம்பர் 2021ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்