உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகமும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும், புளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்கும் அதன் செய்தியாளர் ஒருவருக்கும் எதிராக அவதூறு வழக்கு தொடுத்துள்ளனர்.
புளூம்பெர்க்கிற்கும் அதன் செய்தியாளர் லோ டி வெய்க்கும் எதிரான வழக்கு, மார்ச் 3ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.
தங்கள் சொத்துப் பரிவர்த்தனைகள் குறித்து புளூம்பெர்க்கும் மற்ற சில ஊடகங்களும் வெளியிட்டிருந்த கட்டுரைகள், அவதூறு பரப்புவதாக இருந்ததாகக் கருதிய இரு அமைச்சர்களும், அந்தச் செய்தி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தனர்.
‘மேலும் ரகசியத்தில் மூழ்கியுள்ள சிங்கப்பூரின் மாளிகை பரிவர்த்தனைகள்’ என்ற தலைப்பில் டிசம்பர் 12ஆம் தேதி அந்த புளூம்பெர்க் கட்டுரை வெளியாகியிருந்தது. சிங்கப்பூரில் இடம்பெறும் உயர்தர பங்களா (Good Class Bungalow) பரிவர்த்தனைகள் குறித்து அக்கட்டுரையில் விமர்சிக்கப்பட்டிருந்தது.
2021 செப்டம்பர் முதல் புளூம்பெர்க்கில் சொத்துச் சந்தை செய்தியாளராக இருந்துவரும் திரு லோ அக்கட்டுரையை எழுதியிருந்தார்.
2024 ஜனவரி முதல் டிசம்பர் தொடக்கம் வரை கையெழுத்தான உயர்தர பங்களா பரிவர்த்தனைகளில் அக்கட்டுரை கவனம் செலுத்தியது. டாக்டர் டான், திரு சண்முகம் இருவரும் சம்பந்தப்பட்ட சொத்துப் பரிவர்த்தனைகள் பற்றியும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
டிசம்பர் 16ஆம் தேதி இரு அமைச்சர்களும் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவுகளில், புளூம்பெர்க்கின் கட்டுரை தங்களுக்கு எதிராக அவதூறு பரப்புவதாக இருந்ததாகக் கூறினர். சட்ட ஆலோசனை பெற்ற பிறகு, அக்கட்டுரை தொடர்பில் கோரிக்கைக் கடிதங்களை அனுப்பப்போவதாக அமைச்சர்கள் சொல்லியிருந்தனர்.
சொத்துப் பரிவர்த்தனைகள் குறித்து அவதூறு அறிக்கைகளை வெளியிட்டிருந்த மற்ற ஊடகங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர்கள் கூறியிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இணையப் பொய்யுரைக்கும் சூழ்ச்சித்திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (பொஃப்மா) அக்கட்டுரை தொடர்பில் 2024 டிசம்பர் 23ஆம் தேதி புளூம்பெர்க்கிற்கு எதிராகத் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.