ஸ்காட்லாந்தில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுகளில் 200 மீட்டருக்கான ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூரின் சாந்தி பெரேரா எட்டாம் நிலையை அடைந்தார்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 31) நடந்த அப்போட்டியில் சாந்தி 23.32 நொடிகளில் ஓடி முடித்தார். காமன்வெல்த் போட்டிகளில் 200 மீட்டருக்கான ஓட்டத்தில் சாந்தி பங்குபெறுவது இதுவே முதன்முறை.
கிளாஸ்கோ நகரின் ஸ்காட்ஸ்டன் விளையாட்டரங்கில் நடந்த அந்தப் பந்தயத்தில் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளின் அடெஜா ஹொட்ஜ் 22.07 நொடிகளில் ஓடி, முதலிடத்தில் தங்கம் வென்றார். டிரினிடாட் டொபேகோவின் ஷானிக்குவா பஸ்கொம்ப் 22.35 நொடிகள் ஓடி இரண்டாம் நிலையில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். மூன்றாம் நிலையில் ஜமைக்காவின் அலெனா ரெய்ட் 22.56 நொடிகளில் ஓடிக் கடந்து வெண்கலத்தை அடைந்தார்.
காமன்வெல்த் விளையாட்டுகளில் தனி ஒருவருக்கான ஓட்டப்பந்தயத்துக்கு தகுதிபெற்ற முதல் சிங்கப்பூரர் என்ற பெருமையை 29 வயது சாந்தி வியாழக்கிழமை பெற்றார்.
அதற்கு முன்னதாக இவ்வாரத் தொடக்கத்தில் ஜூலை 27 அன்று நடந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கான தகுதிச் சுற்றில் சாந்தி அரைஇறுதி போட்டிவரை சென்றார்.
அப்போட்டியை அவர் 11.24 நொடிகளில் கடந்தார். இப்பருவத்தில் 100 மீட்டர் பந்தயத்தில் அவர் எடுத்துக்கொண்ட மிக வேகமான நேரம் அதுவாகும். அதன்படி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2023ஆம் ஆண்டில் அவர் சாதித்த தேசிய சாதனையான 11.20 நொடிகளைவிட இப்போட்டியின் தகுதிச்சுற்றில் அவர் 0.04 நொடிகள் கூடுதலாக எடுத்துள்ளார்.

