சிங்கப்பூர் ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா தமது வாழ்க்கைத்தொழிலின் ஏற்ற இறக்கங்களைப் பற்றியும் வெற்றி தோல்வி குறித்த தமது கண்ணோட்டம் பற்றியும் துணைப்பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் பகிர்ந்துகொண்டார்.
அவர்கள் இருவரும் முதன்முதலாக எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தனர்.
முதன்முதலில் திரு வோங்கை 2015ஆம் ஆண்டில் சந்தித்த பிறகு, தாம் பல ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டதாகக் கூறினார் பெரேரா.
2015ஆம் ஆண்டில் பெரேரா 200 மீட்டர் பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.
அதனைத் தொடர்ந்து சுயநெருக்குதலுக்கு விட்டுக்கொடுத்தது போலவும் அந்த நிலையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருந்தது போலவும் தாம் உணர்ந்ததாக அவர் கூறினார்.
“உண்மையிலேயே நான் அதில் கவனம் செலுத்தாமல், என்மீது மட்டுமே கவனம் செலுத்தவேண்டும்”, என்றார் பெரேரா.
உங்களுக்கு முக்கியமானவர்கள் சொல்வதைக் கேளுங்கள்
சிரமமான காலத்தை எதிர்நோக்குவோருக்கு எத்தகைய ஆலோசனையை வழங்குவீர்கள் என்று திரு வோங், பெரேராவிடம் கேட்டார்.
அதற்கு, அவர்களுக்கு முக்கியமானவர்கள் கூறும் கருத்துகளைக் கேட்கவேண்டும் என்று பெரேரா பதிலளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
உங்கள் பயணத்தில் கவனம் செலுத்துங்கள்
தமது அனுபவத்தைக்கொண்டு பேசிய பெரேரா, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது முக்கியமன்று என்று கூறினார்..
“நீங்கள் உங்கள் எண்ணத்தை உங்கள் சொந்தப் பாதைக்குத் திருப்பிவிடவேண்டும். வாழ்க்கை பல வழிகளில் செல்கிறது. ஆனால், இறுதியில் நீங்களே அதற்கு வழி அமைக்கவேண்டும்,” என்று பெரேரா கூறினார்.
தொடர்சாதனை
இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து, பெரேரா பல போட்டிகளை வென்று புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
ஆக அண்மையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி புடாபெஸ்ட்டில் நடைபெற்ற உலகத் திடல்தட வெற்றியாளர் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அவர் புதிய தேசிய சாதனை படைத்தார்.
அப்பந்தயத்தின் தகுதிச்சுற்றை 22.56 நொடிகளில் முடித்து இரண்டாம் நிலையில் வந்தார் பெரேரா.
அவர் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறவில்லை என்றபோதும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் பந்தயத்திற்குத் தகுதிபெற்றுள்ள முதல் சிங்கப்பூரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

