ஆக அண்மைய அமைச்சரவை மாற்றங்களுடன், அடுத்த தலைமுறைக் குழுவின் வடிவம் தெரியத் தொடங்கியுள்ளதாக பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
அரசு பதவி வகிக்கும் இளம் தலைவர்கள் காலப்போக்கில் கூடுதல் பொறுப்புகளை ஏற்பர் என தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
முன்னாள் மூத்த அரசாங்க ஊழியர்களான ஜெஃப்ரி சியாவும் டேவிட் நியோவும் தற்காலிக அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவுள்ளனர். முன்னாள் நிரந்தரச் செயலாளரான திரு சியாவ், தற்காலிகப் போக்குவரத்து அமைச்சராகவும் நிதி மூத்த துணை அமைச்சராகவும் பொறுப்பேற்பார்.
முன்னாள் ராணுவத் தலைவரான திரு நியோ, 47, தற்காலிக கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சராகவும் கல்வி மூத்த துணை அமைச்சராகவும் நியமிக்கப்படுவார்.
இந்த அமைச்சரவை மாற்றங்களுடன், அனைத்து அமைச்சுகளிலும் அரசு பதவி வகிக்கும் புதியவர்கள் இருப்பர் என்றார் அவர்.
“எதிர்காலத்தில் கூடுதல் பொறுப்புகளுக்கு இளம் தலைவர்களைத் தயார்ப்படுத்த, அரசாங்கத்தின் வெவ்வேறு அம்சங்களில் அவர்களுக்குக் கூடுதல் அனுபவம் வழங்கவே நான் இதைச் செய்கிறேன்,” என்று பிரதமர் வோங் விளக்கினார்.
இளநிலை அரசு பதவி வகிப்போர் கூடுதல் பொறுப்புகளை ஏற்கத் தயாராக இருக்கும்போது ஓரிரு ஆண்டுகளில் மேலும் மாற்றங்கள் செய்வதை தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
புதிதாக அரசு பதவி வகிப்போரின் சார்பில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருவாட்டி ஜாஸ்மின் லாவ், 42, மூத்த தலைவர்கள் தங்கள்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு தாம் நன்றியுடன் இருப்பதாகச் சொன்னார். தகவல், மின்னிலக்க மேம்பாட்டு; கல்வி துணை அமைச்சராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த ஏற்பாடுகள் நீண்டகாலத்துக்கானவை என்பதால், நாங்கள் எங்கு அனுப்பப்பட்டாலும், இப்போது நாங்கள் செய்யும் பணியின் அடிப்படையில் காலவோட்டத்தில் நாங்கள் தொடர்ந்து கடப்பாட்டுடனும் நீக்குப்போக்குடனும் இருக்க வேண்டும்,” என்றார் அங் மோ கியோ குழுத்தொகுதி எம்.பி.யான அவர்.
பலரும் தங்களது கடந்தகால பணியிலிருந்து வேறுபட்ட அமைச்சுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளதை அவர் சுட்டினார். தமது வாழ்க்கைத்தொழிலின் பெரும்பகுதியைச் சுகாதாரப் பராமரிப்பில் செலவிட்ட திருவாட்டி லாவ், அண்மையில் சுகாதார அமைச்சில் துணைச் செயலாளராக (கொள்கை) இருந்தார். பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அப்பதவியிலிருந்து அவர் விலகினார்.
“கொள்கைகள் காலப்போக்கில் உருமாறி இப்போதைய நிலைக்கு எப்படி வந்துள்ளன என்பதைப் பற்றி நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வெவ்வேறு அம்சங்களில் பங்குதாரர்கள் மீதான எங்களது பணியின் தாக்கத்தைப் பற்றியும் நாங்கள் கற்க வேண்டும்,” என்றார் அவர்.