தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துணிவும் புத்தாக்கமும் கொண்டு சிங்கப்பூரின் எதிர்காலத்தைக் காண்க: டெஸ்மண்ட் லீ

2 mins read
43324634-841d-4d96-8e35-5a611d276d3a
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்ற பலதுறைத் தொழிற்கல்லூரி கருத்தரங்கு 2025ன் தொடக்க விழாவில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கலந்துகொண்டு பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் எதிர்காலத்தைத் துணிவுடனும் புத்தாக்கத்துடனும் கற்பனை செய்து பார்க்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

புவிசார் அரசியல் மற்றும் பொருளியல் நெருக்கடிநிலை, மூப்படையும் சமூகம், தொழில்நுட்பம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை இருந்து வரும் நிலையில் தேசிய அளவிலான விவகாரங்களுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களை அவர் ஊக்குவித்தார்.

சிங்கப்பூரின் எதிர்காலத்தைத் துணிவுடனும் புத்தாக்கத்துடனும் கற்பனை செய்து பார்க்கும் அதே சமயத்தில் மாணவர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் லீ வலியுறுத்தினார்.

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நேற்று (செப்டம்பர் 15) நடைபெற்ற பலதுறைத் தொழிற்கல்லூரி கருத்தரங்கு 2025ன் தொடக்க விழாவில் அமைச்சர் லீ கலந்துகொண்டு இக்கருத்துகளை முன்வைத்தார்.

கல்வி அமைச்சர் என்கிற முறையில் இந்நிகழ்ச்சிக்கு அவர் சென்றது இதுவே முதல்முறை.

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் மாநாட்டு மையத்தில் கூடியிருந்த ஏறத்தாழ 500 மாணவர்த் தலைவர்களிடம் அமைச்சர் லீ பேசினார்.

இந்த மாணவர்கள் சிங்கப்பூரில் உள்ள ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள்.

சிங்கப்பூரை மேம்படுத்தும் வழிவகைகளைப் பற்றிக் கலந்துரையாட மாணவர்களை அமைச்சர் லீ ஊக்குவித்தார்.

1996ஆம் ஆண்டிலிருந்து இந்தக் கருத்தரங்கு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இவ்வாண்டுக்கான கருத்தரங்கு செப்டம்பர் 19ஆம் தேதிவரை நடைபெறும்.

கலந்துரையாடல், கற்றல் பயணங்கள், அரசாங்கத்துடனும் தொழில்துறைத் தலைவர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை மூலம் நாடு எதிர்நோக்கும் விவகாரங்களை அலசி ஆராய இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

“எங்கள் இல்லம், எங்கள் சிங்கப்பூர்” எனும் கருப்பொருளுடன் இவ்வாண்டின் கருத்தரங்கு நடைபெறுகிறது.

அறுபது ஆண்டு காலமாகச் சிங்கப்பூரைக் கட்டியெழுப்பும் பணிகளைக் கருத்தரங்கு கொண்டாடுகிறது.

அடுத்த தலைமுறை நகரமாக சிங்கப்பூரைக் கற்பனை செய்து பார்க்கும்படி மாணவர்களை அது கேட்டுக்கொண்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் வளரும் பருவத்திலேயே வலுவான பண்புகளை வளர்த்துக் கொண்டு, பரந்த சமூகத்திற்குப் பங்களிக்கும் வகையில் தங்கள் குணாதிசயங்களை வடிவமைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்