சிங்கப்பூரில் கார் வாகனங்களைப் பகிர்ந்துகொள்ளும் சேவை வழங்கும் ‘ஷேரியட்’ நிறுவனம், அதன் வாடகைச் சேவையை ‘அடுத்த அறிவிப்பு வரும் வரை’ நிறுத்திக்கொண்டுள்ளது.
“நிறுவனம் அதன் வர்த்தகத்தை மறுசீரமைப்பு மற்றும் சேவைகளை மறுஆய்வு செய்வதன் அங்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எங்கள் செயல்பாடுகள் முறையாக மாற்றியமைக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மதிப்பிடப்படுகின்றன,” என்று அதன் ஃபேஸ்புக் பதிவில் புதன்கிழமை (டிசம்பர் 31) ஷேரியட் தெரிவித்துள்ளது.
மேல்விவரங்கள் தேவைப்படும்போது பகிரப்படுவதோடு வாடிக்கையாளர்களின் ஆதரவுக்கும் புரிந்துணர்வுக்கும் நிறுவனம் பதிவில் நன்றி தெரிவித்துக்கொண்டது.
பலர் இந்த எதிர்பாராத அறிவிப்பைக் கண்டு ஃபேஸ்புக்கில் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதுவரை செய்த முன்பதிவுகள் பற்றிய கேள்விகளையும் டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பிறகு செலுத்திய கட்டணங்களைத் திரும்பக் கோரியும் அவர்கள் பதில் பதிவுகள் செய்துள்ளனர்.
அந்நிறுவனத்தின் வாகனங்கள் கைப்பேசி செயலிகளில் இயங்குபவை. அதனால் சாவிகள் இல்லாமல் அவற்றை ஓட்ட முடியும். எனவே சிலர் காரின் உள்ளே வைத்துச் சென்ற பொருள்களை எப்படி மீட்பது போன்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஷேரியட் நிறுவனம் உள்பட கார் சேவை சார்ந்த 17 நிறுவனங்கள் சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் அவைகளுக்கு கடன்வழங்கிய வங்கிகளிடம் ஆறு மாதகாலம் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருக்க தடை உத்தரவு கோரியிருந்தன.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அவை கூட்டாக $305.9 மில்லியன் முக்கிய வங்கிகள், அரசாங்க அமைப்புகள் உட்பட பல நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி உள்ளன.
மேலும் அந்த வாகன சேவை நிறுவனங்கள் செயல்பாட்டு முறைகளிலும் நிதி நடவடிக்கைகளிலும் ஒருங்கிணைந்துள்ளன. வர்த்தகம் மேம்பட்டபோது நாளடைவில் சில நிறுவனங்கள் இணைக்கப்பட்டதோடு ஒருசில புதிதாக உருவாக்கப்பட்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வாகன வர்த்தகத்தின் பல சேவைகளை அவை வழங்கிவந்தன. வாகனங்கள் சீர் செய்யும் தொழிற்சாலை, வாடகை வாகன ஓட்டுநர்கள், நிதி நிர்வாகம் போன்றவற்றை ஒருங்கிணைந்தே அவை செயல்படுத்தியுள்ளன.

