சிங்கப்பூரைச் சேர்ந்த திரவப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) நிறுவனமான பெவிலியன் எனர்ஜியை தெமாசெக் நிறுவனத்திடமிருந்து முழுமையாகக் கொள்முதல் செய்துவிட்டதாக ஷெல் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) தெரிவித்தது.
கொள்முதல் தொடர்பான உடன்படிக்கை 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
பெவிலியன் எனர்ஜியை வாங்க செலவழிக்கப்பட்ட தொகையை ஷெல் நிறுவனம் வெளியிடவில்லை.
எல்என்ஜி வர்த்தகர்கள் பட்டியலில் ஷெல் ஏற்கெனவே உலகளாவிய நிலையில் முதலிடம் வகிக்கிறது.
இந்நிலையில், பெவிலியன் எனர்ஜி நிறுவனத்தின் உலகளாவிய எல்என்ஜி வர்த்தகத்தைக் கொள்முதல் செய்துள்ளது.
இதில் ஆண்டுக்கு ஆறரை மில்லியன் டன் தொடர்பான நீண்டகால விற்பனை, விநியோக ஒப்பந்தங்களும் அடங்கும்.
இந்தக் கொள்முதல் மூலம் 2030ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் ஷெல் நிறுவனத்தில் விற்பனை 4 முதல் 5 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகிலேயே ஆக பெரிய எல்என்ஜி கிடங்கு நடுவமாக சிங்கப்பூர் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பெவிலியன் எனர்ஜியை வாங்கியதன் மூலம் சிங்கப்பூரின் எல்என்ஜி சந்தையில் ஷெல் நிறுவனம் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரை அடித்தளமாகக் கொண்டு அது ஆசிய பசிபிக் நாடுகளில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த முடியும்.
கொள்முதல் பரிவர்த்தனையில் சிங்கப்பூரில் பெவிலியன் எனர்ஜி நிறுவனத்துக்குச் சொந்தமான குழாய்வழி எரிவாயு வர்த்தகம் அடங்காது.
அத்துடன், டான்சேனியக் கடற்பகுதியில் உள்ள இரண்டு எண்ணெய், எரிவாயு கிணறுகளும் கொள்முதல் பரிவர்த்தனையில் இடம்பெறவில்லை.

