தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கோம் தீவில் ஷெல் எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை மூடல்

2 mins read
ada78d9f-dcd4-498a-9c69-8a2f0ab83d59
கடல்நீரில் எண்ணெய்க் கசிவைக் கண்காணிக்க செயற்கைக்கோள்களும் வானூர்திகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எண்ணெய் கசிந்ததாக எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து புக்கோம் தீவில் உள்ள தமது எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றை மூடிவிட்டதாக எண்ணெய், எரிவாயு நிறுவனமான ஷெல் (Shell) கூறி உள்ளது.

கசிவு ஏற்பட்டது பற்றி விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக அது மூடப்பட்டதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையத்திடமும் தேசியச் சுற்றுப்புற வாரியத்திடமும் ஷெல் தெரிவித்துவிட்டது.

ஷெல் எரிசக்தி மற்றும் ரசாயன தொழிற்கூட வளாகத்தில் அமைந்துள்ள அந்த சுத்திகரிப்பு ஆலை டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தயாரிப்புகளை உற்பத்தி செய்யக்கூடியது என்று கடல்துறை, துறைமுக ஆணையம், தேசியச் சுற்றுப்புற வாரியம், தேசிய பூங்காக் கழகம், செந்தோசா மேம்பாட்டுக் கழகம் ஆகியன வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) கூட்டாகத் தெரிவித்தன.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்த் தயாரிப்புகளைக் குளிர்விக்கும் நடைமுறைக்கென கடல் நீரை அந்த ஆலை பயன்படுத்துகிறது. குளிர்வித்த பின்னர் வடிந்த நீருடன் டன் கணக்கில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்த் தயாரிப்புகளும் கசிந்துவிட்டதாக ஷெல் மதிப்பிட்டு இருப்பதாக அந்த கூட்டறிக்கை தெரிவித்தது.

“உடனடியாக, குளிர்வித்த நீர் வெளியேறும் குழாயின் முகப்பில் எண்ணெய்க் கசிவைத் தடுக்கவும் கசிந்த எண்ணெய்யை உறிஞ்சவும் ஷெல் ஏற்பாடு செய்தது.

“அதனால் புலாவ் புக்கோமைச் சுற்றியுள்ள பகுதிகளில் எண்ணெய்த் தடங்கள் காணப்படவில்லை,” என்றும் அந்த அமைப்புகள் குறிப்பிட்டன.

அத்துடன், புக்கோம் தீவின் அருகே லேசான எண்ணெய் பளபளப்பைத் துடைத்து சுத்தப்படுத்தும் பணிக்கு ஷெல்லும் சிங்கப்பூர் கடல்துறை துறைமுக ஆணையமும் சில படகுகளை அனுப்பின.

“நிலைமையை அரசாங்க அமைப்புகள் அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றன. மேலும், செயற்கைக்கோள்களும் ஆளில்லா வானூர்திகளும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன,” என்று அறிக்கை குறிப்பிட்டது.

கடந்த அக்டோபர் மாதத் தொடக்கத்தில் புக்கோம் தீவுக்கும் புக்கோம் கெச்சிலுக்கும் இடைப்பட்ட கடல்நீரில் 30 முதல் 40 டன் வரையிலான எண்ணெய்யும் தண்ணீரும் கசிந்தன. நிலத்தில் இருந்து சென்ற ஷெல் குழாய் ஒன்றிலிருந்து அவை கசிந்ததாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்