சக்கர நாற்காலி செல்ல ஏதுவாகவும் மூத்தோருக்கு உதவியாக இருக்கக்கூடிய பல வசதிகளும் இனி புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் இருப்பது கட்டாயம் ஆகும்.
கட்டட, கட்டுமான ஆணையத்தின் விதிமுறைகளில் சில மேம்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த மாற்றங்கள் இடம்பெறுகிறது. புதிய விதிமுறைகள் குறித்து திங்கட்கிழமை (ஏப்ரல் 7) அறிவிக்கப்பட்டது.
புதிய விதிமுறைப்படி நடைபாதைகளில் கைப்பிடிகள், பெரிய மின்தூக்கிகள், அதிக அளவில் அமர இடங்கள் ஆகியவை கட்டடங்களில் இருக்க வேண்டும்.
அதேபோல் கல்வி வளாகங்களில் தாய்மார்கள் பிள்ளைகளுக்கு பால் கொடுக்கும் அறைகளும் இருக்க வேண்டும்.
இவ்வாண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களுக்கான திட்ட வரைவுகளைச் சமர்பிக்கும்போது புதிய வசதிகள் கட்டாயம் இடம்பெறவேண்டும்.
ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள கட்டங்களில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளும்போது புதிய விதிமுறைகள் பொருந்தும்.
புதிய விதிமுறைப்படி ஒரு கட்டடத்தில் இருந்து மற்ற கட்டடங்கள், போக்குவரத்து நிறுத்தங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல நடைபாதை இணைப்புகள் இருக்க வேண்டும்.
மேலும் அந்தப் பாதைகள் கூரைகள் கொண்டவையாகவும் சக்கர நாற்காலி செல்ல ஏதுவாகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
திருவாட்டி ஜூடி வீ புதிதாக வரையட்ட விதிமுறைகளுக்கான அமைப்பில் உள்ளார். தசைநார் தேய்வு சங்கத்தில் இயக்குநராக இருக்கும் திருவாட்டி ஜூடியும் சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்.
“சில கைப்பிடி கொண்ட பாதைகளில் கூரைகள் இல்லை. ஆனால் மாடி படிக்கட்டுகள் உள்ள இடங்களில் கூரைகள் உள்ளன. இதனால் மழை பெய்யும் போது சக்கர நாற்காலிகளில் செல்பவர்கள் மழையில் நனைய கூடும்.
“அதனால் மாடிப்படிகள் உள்ள இடங்களைப் போலவே கைப்பிடி கொண்ட பாதைகளில் கூரைகள் இருக்க வேண்டும்,” என்று ஜூடி தெரிவித்தார்.
“மேலும் மின்தூக்கிகள் பெரிதாக இருக்க வேண்டும். சக்கர நாற்காலியில் வருவபவர்களுக்குப் போதிய இடம் இருப்பதை அது உறுதி செய்யும்.
அதேபோல் மின்தூக்கிகளில் உள்ள பொத்தான்கள் நாற்காலிகளில் வருபவர்களுக்கு எட்டும் உயரத்தில் இருக்க வேண்டும்,” என்றும் திருவாட்டி ஜூடி குறிப்பிட்டார்.
இதற்கிடையே, “மூத்தோருக்கு பயன் தரும் விதமாக முக்கியமான சில இடங்களில் அவர்கள் அமர்வதற்காக இருக்கை வசதிகள் அமைக்கப்படும். மேலும் கைப்பிடி வசதிகளுடன் கழிப்பறைகள் கட்டப்படும்,” என்று கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்தது.

