மத்திய வர்த்தக வட்டாரத்தில் கட்டப்படவிருக்கும் புதிய கூரையிடப்பட்ட நடைபாதை, தஞ்சோங் பகார் சமூக மன்றத்தையும் தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தையும் இணைக்கவுள்ளது.
அந்த நடைபாதை கெண்டோன்மண்ட் ரோட்டில் உள்ள சமூக மன்றத்தையும் ரயில் நிலையத்தின் ‘ஏ’ வெளிவழியையும் இணைக்கும்.
அந்த நடவடிக்கையின் மூலம் ‘பினக்கல்@டக்ஸ்டன், தஞ்சோங் பகார் பிளாசா, அப்பகுதியிலுள்ள மற்ற மேம்பாடுகள் ஆகியவற்றிலிருந்து ரயில் நிலையத்திற்கு எளிதாகச் செல்ல முடியும் என்று தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ செசியாங் தெரிவித்தார்.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) நடைபெற்ற தேசிய தின இரவு விருந்து நிகழ்ச்சியின்போது அந்தத் திட்டங்களை அறிவித்த திரு ஃபூ, காலக்கெடு எதையும் குறிப்பிடாமல், அத்திட்டம் முழுமை பெற இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று குறிப்பிட்டார்.
முக்கிய அக்கம்பக்க வசதிகளுக்கு மேலும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் நடந்துசெல்வதை நோக்கமாகக் கொண்ட நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ‘நட்பார்ந்த சாலைகள்’ திட்டத்திற்கு ஏற்ப அத்திட்டம் அமைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
தஞ்சோங் பகார் சமூக மன்றத்தில் நடைபெற்ற அந்த இரவு விருந்து நிகழ்ச்சியில், தஞ்சோங் பகார், ராடின் மாஸ், குவீன்ஸ்டவுன் தொகுதிகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.


