‘ஆர்டிஎஸ்’ சேவை தொடங்கியபின் போட்டித்தன்மையுடன் விளங்கத் தயாராகிறது ஷெங் சியோங்

‘ஆர்டிஎஸ்’ சேவை தொடங்கியபின் போட்டித்தன்மையுடன் விளங்கத் தயாராகிறது ஷெங் சியோங்

2 mins read
0f989490-003c-4f16-9720-665ea0722dcb
ஷெங் சியோங் நிறுவனத்தின் வருவாய் இந்த ஆண்டின் முற்பாதியில் 11.9 விழுக்காடு உயர்ந்து $855.4 மில்லியனாகப் பதிவாகியுள்ளது - படம்: ஏஷியாஒன்

ஷெங் சியோங் பேரங்காடி, 2027 ஜனவரியில் சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையே ‘ஆர்டிஎஸ்’ ரயில் சேவை தொடங்குமுன் தனது விலைப் பட்டியல், விற்பனைப் பொருள்களை மறுஆய்வு செய்யவிருப்பதாகக் கூறியுள்ளது.

அந்தச் சேவை தொடங்கியபின் சிங்கப்பூரின் மளிகைப் பொருள் துறையில் போட்டித்தன்மை அதிகரிக்கக்கூடும் என்பதால் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க அது முயல்கிறது.

போட்டித்தன்மையுடன் விளங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாக ஷெங் சியோங் தலைமை நிர்வாக அதிகாரி லிம் ஹொக் சீ, புதன்கிழமை (ஜூலை 29) கூறினார்.

குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொட்டலமிடப்பட்ட மளிகைப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்களின் விலை தொடர்பில் போட்டி தீவிரமடையக்கூடும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும், பயணக் கட்டணம், பயண நேரம், நாணய மாற்று விகிதம், வாடிக்கையாளர் நடத்தை ஆகியவற்றைப் பொறுத்தே இதன் உண்மையான தாக்கம் இருக்கும் என்று அது குறிப்பிட்டது.

முன்னதாக, சிங்கப்பூரர்கள் ‘ஆர்டிஎஸ்’ ரயில் சேவை தொடங்கிய பிறகு ஜோகூரில் கூடுதலாக $1.05 பில்லியன் செலவு செய்வர் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. மேலும், மளிகைப் பொருள்கள், மருந்துப் பொருள்கள், அழகுப் பராமரிப்புப் பொருள்கள் போன்றவற்றுக்காகச் சிங்கப்பூரர்கள் அங்குச் செய்யும் செலவு ஆண்டுக்கு 51 விழுக்காடு அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஷெங் சியோங் சிங்கப்பூரில் தனது கடைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. ஜூலை முதல் செப்டம்பர் மாதத்திற்குள் ஹவ்காங், செங்காங், உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் மூன்று புதிய கடைகள் திறக்கப்படவுள்ளன.

ஜூன் மாதத்திலிருந்து இணையச் சந்தை வளர்ச்சியை முன்னிட்டு ஃபூட்பாண்டா நிறுவனத்துடன் பங்காளித்துவத்தைத் தொடங்கியுள்ளது.

நிறுவனத்தின் வருவாய் இந்த ஆண்டின் முற்பாதியில் 11.9 விழுக்காடு உயர்ந்து $855.4 மில்லியனாகப் பதிவாகியுள்ளது. புதிய கடைகளின் திறப்பும் சலுகைகள், சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தொடர்ந்து செலவுசெய்வதும் இதற்கு முக்கியக் காரணங்களாகும். நிறுவனத்தின் செலவினங்கள் அதிகரித்தபோதிலும், அதன் நிகர லாபம் 11.9 விழுக்காடு உயர்ந்து $81 மில்லியனை எட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மளிகைப் பொருள்கள்விலைபோட்டித்தன்மைஆர்டிஎஸ்சிங்கப்பூர்ஜோகூர் பாரு