தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செப்டம்பரிலிருந்து மானியத்துடன் அக்கி அம்மை தடுப்பூசி

3 mins read
5fa051c2-32b5-4a0f-993e-f6e524f61157
அக்கி அம்மை தடுப்பூசி, ‘ஷிங்கிரிக்ஸ்’. - படம்: ஜிஎஸ்கே

இவ்வாண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து ‘ஷிங்கல்ஸ்’ எனப்படும் அக்கி அம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசி சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கும் கட்டுப்படியான விலையில் வழங்கப்படும்.

இந்தத் தடுப்பூசிக்கு ‘ஷிங்கிரிக்ஸ்’ (Shingrix) என்று பெயரிடப்பட்டுள்ளது

‘சாஸ்’ சலுகை வழங்கும் தனியார் மருந்தகங்கள், பலதுறை மருந்தகங்கள், சுகாதார அமைச்சிடமிருந்து நிதி பெறும் நீண்டகாலப் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் அக்கி அம்மை தடுப்பூசிக்கு 75 விழுக்காடு வரை மானியம் வழங்கப்படும்.

‘ஷிங்கிரிக்ஸ்’ தடுப்பூசியைப் பிரிட்டிஷ் மருந்தியல் நிறுவனமான ஜிஎஸ்கே தயாரித்துள்ளது.

அதைச் சிங்கப்பூரில் பயன்படுத்த 2021ஆம் ஆண்டில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அக்கி அம்மை நோய்க்கு எதிராக ‘ஷிங்கிரிக்ஸ்’ தடுப்பூசி 90 விழுக்காடு பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மூத்தோருக்கும் எதிர்ப்புசக்தி குறைவாக இருக்கும் பெரியவர்களுக்கும் இதன் வீரியம் குறைவாக இருக்கக்கூடும்.

இத்தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால் அக்கி அம்மை நோயிலிருந்து குறைந்தது ஏழாண்டுகள் வரை பாதுகாப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அக்கி அம்மை நோயால் சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 30,000 பேர் பாதிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

அக்கி அம்மையால் நோய்வாய்ப்பட்டவருக்கு அந்த நோய் மீண்டும் ஏற்படலாம்.

திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 10) தொற்றுநோய் அவசர நடவடிக்கை நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் ஓங் யி காங், மானியத்துடன் வழங்கப்படும் ‘ஷிங்கிரிக்ஸ்’ தடுப்பூசி தொடர்பான தகவல்களை வெளியிட்டார்.

அக்கி அம்மை நோயை மிகச் சிறந்த முறையில் எதிர்கொள்ளும் தடுப்பூசி இருக்கும்போதிலும் அது மலிவானதல்ல என்று அமைச்சர் ஓங் கூறினார்.

‘ஷிங்கிரிக்ஸ்’ தடுப்பூசி, சுகாதார அறிவியல் ஆணையத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ள அக்கி அம்மை நோய்க்கு எதிரான ஒரே ஒருவகை தடுப்பூசியாகும்.

“அக்கி அம்மை தடுப்பூசிக்கு மானியம் வழங்க முடியுமா என்று மூத்தோர் பலர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினர். அல்லது தடுப்பூசிக்கான கட்டணத்தைச் செலுத்த மெடிசேவ் கணக்கைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்,” என்று அமைச்சர் ஓங் கூறினார்.

இதுதொடர்பான மனு ஒன்று தமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடுகளுக்கு ஏற்ப மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் விலையை நிர்ணயிப்பதாக அவர் கூறினார்.

ஆனால் அந்த நிறுவனங்களை அவர் குறைகூறவில்லை.

“மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் ஒரு சிறிய சந்தையாகும். ஆனால் சிங்கப்பூரர்களின் சராசரி வருமானம் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிகம் என்று அவை கருதுகின்றன. எனவே, தடுப்பூசி உட்பட மற்ற மருந்துகளுக்கும் சிங்கப்பூரர்கள் கூடுதல் செலவு செய்யும் நிலை ஏற்படுகிறது,” என்றார் அமைச்சர் ஓங்.

“இது சுகாதார அமைச்சுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தி உள்ளது. அக்கி அம்மை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் மானியம் வழங்க அமைச்சு விரும்புகிறது. ஆனால் அவ்வாறு செய்தால் எதிர்காலத்தில் சிங்கப்பூருக்கு மருந்துகளை அதிக விலையில் விற்கும் அணுகுமுறை வேரூன்றிவிடக்கூடும்,” என்று அமைச்சர் ஓங் கூறினார்.

அக்கி அம்மை நோய்க்கு எதிராக இரண்டு ஊசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவற்றின் மொத்த விலை $900க்கும் $950க்கும் இடைப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

60 வயதும் அதற்கும் அதிகமான மூத்தோருக்கும் எதிர்ப்பு சக்தி அதிகம் இல்லாத பெரியவர்களுக்கும் ‘ஷிங்கிரிக்ஸ்’ தடுப்பூசிக்கான மானியம் வழங்கப்படும்.

முன்னோடித் தலைமுறையினர், மெர்டேக்கா தலைமுறையினர் ஆகிய மூத்தோர், வெளிநோயாளிச் சூழலில் கூடுதல் மானியங்களுக்குத் தகுதி பெறுவர்.

முன்னோடித் தலைமுறை சிங்கப்பூரர்களுக்கு இரண்டு அக்கி அம்மை தடுப்பூசிகளுக்கான விலை $900லிருந்து ஏறத்தாழ $75லிருந்து $150 வரை குறையும்.

மெர்டேக்கா தலைமுறையினருக்குத் தடுப்பூசிகளுக்கான விலை $112.50க்கும் $225க்கும் இடைப்பட்டிருக்கும்.

‘ஷிங்கிரிக்ஸ்’ தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி பெறும் மற்ற சிங்கப்பூரர்கள் (பெரியவர்கள்) $150க்கும் $300க்கும் இடைப்பட்ட தொகையை செலுத்த வேண்டிவரும்.

சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் ஏறத்தாழ $450 செலுத்த வேண்டிவரும் என்று தெரிவிக்கப்பட்டது.

மானியத் தொகை கழித்த பிறகு, எஞ்சியுள்ள தொகையை மெடிசேவ் கணக்கு பயன்படுத்தி செலுத்த 2026ஆம் ஆண்டிலிருந்து அனுமதிக்கப்படும் என்றும் அதன் விளைவாக அக்கி அம்மை தடுப்பூசி போட்டுக்கொள்ள கைக்காசு தேவைப்படாது என்றும் அமைச்சர் ஓங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்