ஆளில்லா வானூர்தி மூலம் அணைக்கப்பட்ட கப்பல் தீ

ஆளில்லா வானூர்தி மூலம் அணைக்கப்பட்ட கப்பல் தீ

1 mins read
92c59eda-c8a7-4ac4-9c93-719c21f4e21e
பாசிர் பாஞ்சாங் முனையத்திலிருந்த கப்பல் ஒன்றில் மூண்ட தீயை அணைக்க ஆளில்லா வானூர்திகள் கைகொடுத்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைக்க முதன்முறையாக ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் பாசிர் பாஞ்சாங் முனையத்தில் சரக்குக் கப்பல் ஒன்றில் மூண்ட தீயை ஆளில்லா வானூர்திகள் மூலம் அணைத்ததாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் தலைமை நிர்வாகி ஆங் வீ கியோங் தெரிவித்தார்.

சிங்கப்பூர்க் கடல்துறை பாதுகாப்பு வாரத்தின் தொடக்கத்தில் பேசிய அவர், தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த கப்பலில் அதிக வெப்பமுள்ள இடங்களைச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் கண்டறிய ஆளில்லா வானூர்திகளின் அகச்சிவப்புக் கதிர்கள் பயன்படுத்தப்பட்டன என்றார்.

அது, விரைவாகத் தீயை அணைக்கவும் கைகொடுத்தது என்றார் ஆங்.

சம்பவத்தின்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் பாதிக்கப்பட்ட இடத்தைச் சுற்றிவளைக்க கண்காணிப்புப் படகுகளை அனுப்பியது. அப்போது வான்வழி கண்காணிப்பில் தீயணைப்பாளர்களுக்கு உதவ ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்பட்டன.

சிங்கப்பூரின் கடல் துறைமுகத்தில் கண்காணிப்பையும் அவசரகாலச் சேவையையும் வலுப்படுத்த ஆளில்லா வானூர்திகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில் அதுவும் ஓர் அம்சம் என்று ஆங் குறிப்பிட்டார்.

2025ஆம் ஆண்டு தேடல், மீட்புப் பணிகளில் முக்கியப் பங்காற்றியோருக்கு ஒன்பது கடல்துறைப் பாதுகாப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

அவற்றுள் ஒன்று ஏ.பி. மோலர் சிங்கப்பூர் என்ற கப்பல் போக்குவரத்து நிறுவனம்.

கடந்த ஆண்டு ஜூன் 7ஆம் தேதி, நிறுவனத்தின் மேர்ஸ்க் ஹம்பர்க் என்ற சிங்கப்பூர் கொடியேந்திய கப்பலின் ஊழியர்கள், ஆபத்தான நிலையிலிருந்த படகிலிருந்து 50 குடியேறிகளை மீட்டனர்.

குறிப்புச் சொற்கள்
கடல்துறைதுறைமுகம்ஆணையம்ஆளில்லா வானூர்திதீகப்பல்