காவல்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் கருவியைப் பயன்படுத்திய ஆடவர்

காவல்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் கருவியைப் பயன்படுத்திய ஆடவர்

2 mins read
aeb50e59-56bd-4892-8568-74d1b374d758
சமுராய் வாள், ‘நக்கல் டஸ்டர்’, ‘டேசர்’ போன்ற கருவி உள்ளிட்ட ஆயுதங்களைக் காவல்துறையினர் கைப்பற்றினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆடவர் ஒருவர் இரண்டு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளிடம் ‘டேசர்’ போன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தும் கருவியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகளில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் அந்த 38 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.

முதுகில் காயங்களும் உடலின் கீழ்ப்பகுதியில் உணர்வின்மையும் ஏற்பட்டதால் அதிகாரி ஹைருல் அன்வார் அப்துல் கஹார், 32, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் வீடு திரும்பிய அவருக்கு நான்கு நாள்கள் மருத்துவ விடுப்பு கொடுக்கப்பட்டது.

மற்றோர் அதிகாரி முகம்மது அஃபிக் யஹ்யா, 29, வலது கையிலும் காலிலும் வலியை உணர்ந்தார்.

அவ்விரு அதிகாரிகளுக்கும் நிரந்தரக் காயங்கள் ஏற்படவில்லை.

விக்டோரியா ஸ்திரீட்டில் காரில் அந்த அதிகாரிகள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றை அவர்கள் கண்டதாக காவல்துறையினர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.

அந்த காரை ஓட்டிய ஆடவரிடம் வாகனத்தை நிறுத்தும்படி அவர்கள் சைகை காட்டினர்.

மூன்று தடங்கள் உள்ள சாலையில் இரண்டாவது தடத்தில் அந்த ஆடவர் காரை நிறுத்தினார்.

அடையாள அட்டையையும் ஓட்டுநர் உரிமத்தையும் காட்டும்படி அதிகாரிகள் அந்த ஆடவரிடம் கேட்டபோது அவர் அடையாள அட்டையை மட்டுமே காண்பித்தார்.

போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதைத் தவிர்க்க, கூடுதல் சோதனைகளுக்காக காரை சாலையோரமாக நிறுத்தும்படி அதிகாரிகள் அவரைக் கேட்டுக்கொண்டனர்.

அந்த ஓட்டுநரும் அவரது காரை சாலையின் மூன்றாம் தடத்தில் நிறுத்தினார். காரைவிட்டு வெளியேறிய அவர், ஆயுதம்போல் காணப்பட்ட கறுப்புப் பொருள் உள்ளிட்ட உடைமைகளைத் தூக்கிக்கொண்டு ஓடினார்.

அதிகாரிகள் அவரைத் துரத்திப் பிடித்தனர். அந்தப் போராட்டத்தில், சமுராய் வாள் ஒன்று தரையில் விழுந்தது. அதன் பிறகு அந்த ஆடவர் ‘டேசர்’ போன்ற கருவியைக் கொண்டு பலமுறை அதிகாரிகளைத் தாக்கினார்.

அருகிலிருந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை முழுநேர தேசிய சேவையாளர் முகம்மது அக்பர் மதர்ஷா முகம்மது சுல்தான், 22, அதிகாரிகளுக்கு உதவினார். அவருடைய உதவியால், அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

சமுராய் வாள், ‘நக்கல் டஸ்டர்’, ‘டேசர்’ போன்ற கருவி, போதைப்பொருள் கருவிகள் ஆகியவற்றைக் காவல்துறையினர் கைப்பற்றினர்.

குறிப்புச் சொற்கள்