தாப்பா: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள பீடோர் சென்ட்ரல் பகுதியில் இருக்கும் பெட்ரோல் நிலையம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. இச்சம்பவம் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 29) நடந்தது.
காரில் இருந்த 41 வயது ஆடவரை இரு துப்பாக்கிக்காரர்கள் சுட்டதில், அவரது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
பெரித்தா ஹரியான் செய்தி நிறுவனத்தின் தகவல்படி, பாதிக்கப்பட்டவர் தமது காரில் பெட்ரோல் நிரப்புவதற்காக மாலை 6.08 மணிக்கு அங்கு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் காருக்கு முன்பாகக் கறுப்பு நிறக்கார் ஒன்று திடீரென வந்து நின்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காரிலிருந்து இறங்கிய துப்பாக்கிக்காரர்கள் பாதிக்கப்பட்டவரின் வாகனத்தை நோக்கிப் பலமுறை சுட்டுவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தைக் காட்டும் காட்சிகள் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகின.
இதில் ஒரு தோட்டா காரில் இருந்த ஆடவரைக் காயப்படுத்தியது. காயமடைந்தவர் முதலில் தாப்பா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈப்போவில் உள்ள ராஜா மருத்துவமனைக்கு இடம் மாற்றப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாகக் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
