பேங்காக்: தாய்லாந்தின் பள்ளிக்கூடம் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் எட்டுப் பேர் மாண்டதுடன் கிட்டத்தட்ட 15 பேர் காயமுற்றதாக அந்நாட்டுத் தேசியக் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளையரும் அடங்குவார். அவருக்குக் கிட்டத்தட்ட 14 வயது என்று பிபிசி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
மாண்டோரில் ஐந்து ஆசிரியர்களும் அடங்குவர் என்று தாய்லாந்துச் சுகாதார அமைச்சர் பட்டான புரோம்ஃபார் தெரிவித்ததாகப் பிபிசி கூறியது.
நந்தபுரி மாநிலத்தின் பாங் குராய் பகுதியில் உள்ள டெப்சிரின் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். உள்ளூர் நேரப்படி கிட்டத்தட்ட 10 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச்சூடு நடத்திய இளையர் பள்ளிக்கூடத்திற்கு வரும்முன் வீட்டிலிருந்து தாத்தா, பாட்டியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாகக் கூறப்படுகிறது.
தூப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபர் 8ஆம் வகுப்பு மாணவர் என்றும் சம்பவத்தை அடுத்து அந்த மாணவர் தம்மையே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார் என்றும் நந்தபுரி மாநிலக் காவல்துறை ஆணையர் லெஃடிணன்ட்- கர்னல் டிகிராபீ கொங்டீ தெரிவித்தார்.
முதலில் 26 முறை துப்பாக்கியால் சுட்ட மாணவர் பின் 34 முறை சுட்டதாகக் காவல்துறை சொன்னது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பள்ளி மாணவர்களில் ஒருவர், துப்பாக்கிச் சத்தத்தை முதலில் பட்டாசு சத்தம் என்று நினைத்ததாகக் கூறினார்.
துப்பாக்கிச்சுடும் சத்தம் தொடர்ச்சியாகப் பல முறை கேட்டதாகக் கூறிய மாணவர், சிறிது நேர அமைதிக்குப் பின் மீண்டும் அந்தச் சத்தம் கேட்டது என்றார்.
சம்பவத்தின்போது மாணவர்களும் பள்ளி ஊழியர்களும் வளாகத்தைவிட்டு ஓட்டம்பிடித்தனர்.
அவசரப் பிரிவு அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்வதற்கு உதவியாக பெற்றோரும் பொதுமக்களும் பள்ளி வளாகத்திற்குச் செல்வதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
சம்பவம் நிகழ்ந்த பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள பாலர் பள்ளி உள்ளிட்ட இரண்டு பள்ளிகள், வகுப்புகளை ரத்து செய்ததுடன் மாணவர்களை முன்கூட்டியே வீட்டிற்கு அனுப்பிவைத்தன.
இதற்கிடையே, தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல் சம்பவத்தில் மாண்டோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.
“இது நடந்திருக்கக்கூடாது. மாண்டோருக்காக மட்டும் இந்தச் சம்பவத்துக்காக வருத்தப்படுகிறேன். நமது நாட்டில் எப்படி இத்தகைய சம்பவம் நிகழலாம்?,” என்று அவர் கூறினார்.
இதனால்தான் ஆயுதங்கள் வைத்திருப்பதை அரசாங்கம் அனுமதிப்பதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.


