உட்லண்ட்ஸ் எம்ஆர்டி நிலையத்தில் உள்ள காப்பிக் கடையில் கடைக்காரர் ஒருவர் ரொட்டியில் தனது வெறும் கைகளால் வெண்ணெய் தடவியது காணொளியில் காணப்பட்டது.
துவான்துவான் புவான்புவான் காப்பிக் கடையில் நிகழ்ந்த அச்சம்பவம் குறித்து கம்பிளெயின்ட் சிங்கப்பூர் (Complaint Singapore) ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி பதிவிடப்பட்டது. அதற்கு இணையவாசி ஒருவர், “உணவைக் கையாள்பவர் முழுமையாக வெறும் கைகளைக் கொண்டு வேலை செய்கிறார்.
“அதற்கும் மேல் கையுறையின்றி தனது விரல்களைக் கொண்டு வெண்ணெய்யை எடுத்து ரொட்டிமீது தடவுகிறார். அறுவறுப்பாக உள்ளது. ‘நேரடிச் சேவைதான்’... ‘கைத் திறன் உத்தி’களுக்காக (artisanal technique) இக்கடைக்கு மிச்சலின் நட்சத்திரம் வழங்கலாம்,” என்று கிண்டலாகக் கண்டித்துப் பதிவிட்டார்.
அந்த ஃபேஸ்புக் பதிவில் பதிவேற்றப்பட்ட காணொளியில் சம்பந்தப்பட்ட கடைக்காரர் கையுறை அணியாமல் இடது கையில் வெள்ளை ரொட்டியை வைத்திருந்ததும் வலது கையில் ஸ்பூன் கரண்டியைக் கொண்டு ஜேம் போல் தென்பட்ட ரொட்டிச் சுவையூட்டியை ரொட்டியில் தடவியதும் தெரிந்தது. அந்தக் கரண்டியைக் கீழே வைத்த பிறகு அவர் வலது ஆள்காட்டி விரலைக் கொண்டு வெண்ணெய்யைத் தடவியது போல் தெரிந்தது.
அச்செயல் இணையவாசிகளிடையே அருவருப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட இணையவாசி இதுகுறித்து சிங்கப்பூர் உணவு அமைப்பிடம் (எஸ்எஃப்ஏ) புகாரளிக்குமாறு மற்ற இணையவாசிகள் சிலர் குரல் கொடுத்தனர்.
இதன் தொடர்பில் ஏஷியாஒன் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் உணவு அமைப்பு இவ்விவகாரத்தை ஆராய்ந்துவருவதாகத் தெரிவித்தது. தகுந்த ஆதாரம் கிடைத்தால் அமலாக்க நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்று அமைப்பு குறிப்பிட்டது.
