தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2024ல் மோசடிக்காரர்களிடம் $399,000 இழந்த ‘ஷாப்பி’ வாடிக்கையாளர்கள்

2 mins read
62299944-417b-4cff-8b38-5a7741a4db5d
டெலிகிராம், வாட்ஸ்அப் போன்ற தளங்கள் மூலம் பணம் செலுத்தும்படி, பாதிக்கப்பட்டோரிடம் மோசடிக்காரர்கள் கூறினர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை
multi-img1 of 2

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2024), ‘ஷாப்பி’ தளத்தில் மின்விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட பொருள்கள் தொடர்பான மோசடிகளில் வாடிக்கையாளர்கள் 399,000 வெள்ளியை இழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவங்களின் தொடர்பில் ஏறத்தாழ 179 புகார்கள் பெறப்பட்டதாகக் காவல்துறை ஜனவரி 24ஆம் தேதி கூறியது.

மோசடிக்காரர்கள் நேரலை மூலமாகவும் பொருள்களை ‘ஷாப்பி’ தளத்தில் பட்டியலிட்டும் வாடிக்கையாளர்களை வாங்கத் தூண்டியதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

பொருளை வாங்க முன்வந்த வாடிக்கையாளர்களிடம் ‘ஷாப்பி’ செயலிக்கு வெளியே பணம் செலுத்தினால் அதற்கு ஈடாகத் தள்ளுபடி வழங்குவதாக மோசடிக்காரர்கள் கூறியதாகத் தெரிந்தது.

டெலிகிராம், வாட்ஸ்அப் செயலிகள் வழியாகப் பணப் பரிவர்த்தனையைப் பூர்த்தி செய்யும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

சில சம்பவங்களில், பாதிக்கப்பட்டோர் டெலிகிராம் குழுக்களில் இணைக்கப்பட்டனர். அந்தக் குழுக்களில் விற்பனையாளர் என்ற போர்வையில் மேலும் சில மோசடிக்காரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

பாதிக்கப்பட்டோரின் நம்பிக்கையைப் பெறும் விதமாக அந்தக் குழுக்களில் பொருள் வாங்கியதற்கான ரசீதுகளும் பதிவிடப்பட்டன. பாதிக்கப்பட்டோர் ‘பேநவ்’ அல்லது வங்கிப் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தினர்.

சிலருக்கு அவர்கள் வாங்கிய பொருள் சுங்கத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, மேலும் பணம் செலுத்தும்படியும் தெரிவிக்கப்பட்டது.

பொருள் கிடைக்கவில்லை என்றபோதோ விற்பனையாளரைத் தொடர்புகொள்ள முடியாதபோதோ அவர்கள் ‘ஷாப்பி’ தளத்தில் தடைசெய்யப்பட்ட பிறகோதான் பாதிக்கப்பட்டோர், தாங்கள் மோசடிக்கு ஆளானதை உணர்ந்தனர்.

‘ஷாப்பி’ செயலி மூலமாக மட்டுமே பணம் செலுத்தும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொருள் வாங்குவோர் அதைப் பெற்றதாக உறுதிசெய்யும் வரை விற்பவருக்குச் செலுத்தப்பட்ட தொகையை நிறுத்திவைக்கும் பாதுகாப்பு உத்தரவாத அம்சம் அச்செயலியில் இருப்பதைக் காவல்துறை சுட்டியது.

குறிப்புச் சொற்கள்