இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அதிகமாக இடம்பெற்ற நேரடிக் குற்றச்செயல் கடையிலிருந்து திருடுவது. 2024ஆம் ஆண்டின் முதல் ஆறுமாதங்களில் நடந்த திருட்டுச் சம்பவங்களில் பாதிக்கும் மேல், $50க்கும் குறைவான மதிப்புள்ள பொருள்களுடன் தொடர்புடையவை.
2024ன் முதல் அரையாண்டில் நேரடிக் குற்றங்களின் மொத்த குற்றச் சம்பவங்கள் 4.1ஆக உயர்ந்து 10,106ஆகப் பதிவாகியுள்ளதாக ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இவ்வாண்டின் அரையாண்டுக்கான குற்றச்செயல்களின் புள்ளிவிவர அறிக்கை குறித்து பேசிய காவல்துறையினர் கூறினர்.
இது, 2023ஆம் ஆண்டில் அதே காலக்கட்டத்தில் பதிவான 9,704 சம்பவங்களைக் காட்டிலும் அதிகம்.
2024ன் முதல் அரையாண்டில் நடந்த 2,027 நேரடிக் குற்றச் சம்பவங்களில் கடைத் திருட்டுகளின் பங்கு 20.1 விழுக்காடு.
மூன்றாவது ஆண்டாக கடைத் திருட்டுகள் முதல் அரையாண்டில் அதிகரித்துள்ளன.
கைதான இளையர்கள் ஆக அதிக அளவில் புரியும் குற்றம் கடைத்திருட்டு என்றனர் அதிகாரிகள். இத்தகைய சம்பவங்களில் பெரும்பாலானவை பேரங்காடிகளிலும் சுகாதார, நல்வாழ்வுக்கான பொருள்களை விற்கும் கடைகளிலும் நடைபெற்றன.
$50க்கும் குறைவான மதிப்புள்ள பொருள்களே வழக்கமாக திருடப்பட்டன. அவற்றில் சுயப் பராமரிப்புப் பொருள்கள், உணவு, பானங்கள், அழகுப் பொருள்கள் ஆகியவை அடங்கும்.
மானபங்கம், பிறரின் அந்தரங்கத்தை ரகசியமாகக் கண்டு ரசிப்பது (voyeurism), வீட்டிலிருந்து திருடுவது போன்றவை கவலைக்குரிய குற்றங்களாக காவல்துறையின் அறிக்கை குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
மானபங்கக் குற்றத்தின் எண்ணிக்கை 2023ன் முதல் அரையாண்டில் பதிவான 697 சம்பவங்களிலிருந்து 2024ன் அதே காலக்கட்டத்தில் 708ஆக அதிகரித்தது.
2024ல் நடந்த 434 சம்பவங்களில் குற்றவாளிகள் பாதிக்கப்பட்டோருக்குத் தெரிந்தவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
வீட்டிலிருந்து திருடும் சம்பவங்கள், 2023ன் முதல் ஆறு மாதங்களில் பதிவான 163 சம்பவங்களிலிருந்து இவ்வாண்டின் அதே காலக்கட்டத்தில் 173க்கு அதிகரித்தது.
கடைத்தொகுதிகளிலும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2023ன் முதல் அரையாண்டில் பதிவான 77 சம்பவங்களுடன் ஒப்பிட, 2024ன் முதல் அரையாண்டில் 87க்கு உயர்ந்தது.
எனினும், பொதுப் போக்குவரத்தில் திருட்டுச் சம்பவங்கள் குறைந்துள்ளன. அத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை, 2023ல் பதிவான 87லிருந்து இவ்வாண்டு 71 ஆகக் குறைந்தது.
இரவுநேரக் கேளிக்கை இடங்களில் மானபங்கச் சம்பவங்களின் எண்ணிக்கை 70லிருந்து 52க்குக் குறைந்தது. இத்தகைய இடங்களைப் பாதுகாப்புடன் வைத்திருக்க காவல்துறை, வாடிக்கையாளர்களையும் பொதுக் கேளிக்கை நிறுவனங்களையும் ஊக்குவித்துள்ளது.
கடைத்தொகுதிகளில் மானபங்கச் சம்பவங்கள் அதிகரிப்பு
பிறரின் அந்தரங்கத்தை கண்டு ரசிக்கும் சம்பவங்களின் எண்ணிக்கை, 229லிருந்து 257க்கு அதிகரித்துள்ளது. குடியிருப்புப் பகுதிகள் (78 சம்பவங்கள்), கடைத்தொகுதிகள் (44 சம்பவங்கள்) பொதுப்போக்குவரத்து (27 சம்பவங்கள்) ஆகியவை இத்தகைய சம்பவங்கள் அதிகம் நிகழும் மூன்று இடங்களாக உள்ளன.
விளையாட்டு இடங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் மறைவிலிருந்து பிறரைக் காணும் சம்பவங்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் 11 ஆகப் பதிவாகின. கடந்த ஆண்டின் இந்த வகையான ஒரே ஒரு சம்பவம் நடந்தது.
குடியிருப்புகளில் நடந்துள்ள இத்தகைய சம்பவங்களில் 85 விழுக்காடு, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்தவர்களான காதலர்கள், முன்னாள் காதலர்கள், முன்னாள் வாடகைதாரர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களாக இருப்பவர்கள் இந்தக் குற்றங்களைப் புரிந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் குற்றச்சூழல் கட்டுக்குள் இருந்தாலும், பொதுமக்கள் மெத்தனமாக இருக்கக்கூடாது என்று காவல்துறையின் மூத்த உதவி ஆணையாளராகவும் செயலாக்கத் துறையின் இயக்குநராகவும் உள்ள கிரெகரி டான் தெரிவித்தார்.
“பலர் பகிரும் இடங்களில் தனிப்பட்ட பொருள்களைப் பாதுகாப்புடன் வைத்தல், சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளைக் கவனித்தல் போன்ற எளிதான, ஆனால் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முன்தடுப்பு நடவடிக்கைகள், குற்றச்செயல்களை முன்னதாகவே தடுக்க பெரிதும் உதவுகின்றன,” என்று அவர் கூறினார்.
ஒட்டுமொத்த சமூகமாக பங்களிக்கும்போது நேரடியான குற்றங்களைத் தொடர்ந்து குறைவாக வைத்திருக்க முடியும் என்றும் சிங்கப்பூர் உலகிலுள்ள ஆகப் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகத் திகழ முடியும் என்றும் திரு டான் கூறினார்.

