சிங்கப்பூரில் கடைத்திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை மிகவும் கூடியிருக்கிறது. இவ்வாண்டின் முற்பாதியில் அத்தகைய 2,097 சம்பவங்கள் பதிவாயின.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 4.2 விழுக்காடு அதிகம். அப்போது 2,013 கடைத்திருட்டுச் சம்பவங்கள் நடந்தன.
சிங்கப்பூர்க் காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை 5.4 விழுக்காடு கூடுதலாகி 10,341ஆக இருந்தது. சென்ற ஆண்டின் முற்பாதியில் அந்த எண்ணிக்கை 9,809ஆக இருந்தது.
ஒட்டுமொத்தக் குற்றச்செயல்களின் எண்ணிக்கையில் கடைத்திருட்டுகளின் பங்கு 20.3 விழுக்காடு. இளையர்கள் புரியும் குற்றங்களில் தொடர்ந்து அது முன்னிலையில் உள்ளது.
இவ்வாண்டின் முதற்பாதியில் கடைத்திருட்டுக்காகக் கைதுசெய்யப்பட்ட இளையர்களின் எண்ணிக்கை 41.1 விழுக்காடு அதிகரித்து 271ஆக இருந்தது. போன ஆண்டின் அதே காலக்கட்டத்தில் கைதான இளையர்களின் எண்ணிக்கை 192. இளையர்களின் வயது 10 முதல் 19 வரை என்று காவல்துறை தெரிவித்தது.
திருட்டுச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட கடைகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றுக்கு $50க்கும் குறைவாக நட்டம் ஏற்பட்டது.
பொதுவாக உணவு, பானம், மதுபானம், அழகுப் பராமரிப்புப் பொருள்கள் முதலியவை களவாடப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
நீ ஆன் சிட்டியில் உள்ள கோல்ட் ஸ்டோரேஜ் கிளையில் ஆக அதிகமாக 36 திருட்டுச் சம்பவங்கள் நடந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.
மற்றச் சில்லறை வர்த்தகக் கடைகளுடன் ஒப்பிடுகையில் கோல்ட் ஸ்டோரேஜ், ஷெங் சியோங் கிளைகளில் கூடுதல் திருட்டுச் சம்பவங்கள் பதிவாயின.
கடைகளுக்குள் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புப் படக்கருவிகளின் மூலம் காவல்துறையினர் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துச் சட்ட நடவடிக்கை எடுத்தனர்.
கல்வி அமைச்சுடன் சேர்ந்து பள்ளிகளில் குற்றத்தடுப்புக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதாகக் காவல்துறை தெரிவித்தது.
பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரிப்பு
இவ்வாண்டின் முற்பாதியில் பதிவான கத்திக்குத்து, பாலியல் வன்கொடுமை, மானபங்கம், திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டின் அதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் கூடியது.
இவ்வாண்டின் முற்பாதியில் 75 கத்திக்குத்துச் சம்பவங்கள் நடந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. சென்ற ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அது 59ஆக இருந்தது.
போன ஆண்டு முழுதிலும் பதிவான கத்திக்குத்துச் சம்பவங்களின் எண்ணிக்கை 131.
பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் முதற்பாதியில் 233க்கு அதிகரித்தது. கடந்த ஆண்டின் அதே காலக்கட்டத்தில் எண்ணிக்கை 188.
2024 முழுதிலும் 401 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பதிவானதாகக் காவல்துறை அறிக்கை குறிப்பிட்டது.

