எஸ்பிஎஸ் டிரான்சிட் ஊழியரின் விழிப்புணர்வால் சந்தேக நபர் கைது

எஸ்பிஎஸ் டிரான்சிட் ஊழியரின் விழிப்புணர்வால் சந்தேக நபர் கைது

2 mins read
01e59e0e-8dc4-4d75-9452-650613bd25dc
எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து சந்திப்பு நிலைய மேற்பார்வையாளர் சுவா ஜின் கீ (இடது) காவல்துறையிடமிருந்து பாராட்டுச் சான்றிதழ் பெறுகிறார். - படம்: எஸ்பிஎஸ் டிரான்சிட் / ஃபேஸ்புக்
Google News Preferred Icon

கடந்த பிப்ரவரியில் அங் மோ கியோ பேருந்து சந்திப்பு நிலையத்தில் கடைத் திருட்டுச் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்த, எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவன ஊழியர் ஒருவர் பணியில் காட்டிய விழிப்புணர்வுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாதத் தொடக்கத்தில், பேருந்து சந்திப்பு நிலைய மேற்பார்வையாளர் சுவா ஜின் கீ வெளிப்படுத்திய பொதுநலச் செயலுக்காக சிங்கப்பூர் காவல்துறையிடமிருந்து பாராட்டுச் சான்றிதழ் பெற்றார்.

எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் வியாழக்கிழமை (ஜூன் 25) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், இந்தச் சாதனைக்காக சுவாவைப் பாராட்டியது.

பிப்ரவரி மாதம் ஒருநாள் பிற்பகலில், சுவா தனது வழக்கமான வேலையைச் செய்துகொண்டிருந்தபோது, ​​அங் மோ கியோ பேருந்து சந்திப்பு நிலையத்தின் நடைபாதையில் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நடந்துகொள்வதைக் கவனித்ததாக அந்தப் பதிவு விவரித்தது.

அந்த நபர் தள்ளாடியபடி, ஒழுங்கற்ற முறையிலும் நடந்துகொண்டிருந்தார். அருகிலிருந்த பயணிகள் அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

“நிலைமை மோசமடைவதையும், அதனால் பயணிகளுக்குக் காயம் ஏற்படுவதையும் நான் தவிர்க்க விரும்பினேன்,” என்று சுவா பகிர்ந்துகொண்டார்.

அவர் தமது உள்ளுணர்வை நம்பி, அந்த நபர் ஒரு பல்பொருள் அங்காடியை நோக்கிச் சென்றபோது, ​​அவரை யாருக்கும் தெரியாமல் கண்காணிக்க முடிவு செய்தார்.

ஒரு பாதுகாவல் அதிகாரியுடன் சேர்ந்து, சுவா அந்த நபரின் செயல்களைக் கண்காணித்தபோது, ​​அவர் பணம் செலுத்தாமல் தின்பண்டங்களுடன் பல்பொருள் அங்காடியை விட்டு வெளியேறுவதைக் கண்டார்.

கடை ஊழியர்களிடம் நடந்த திருட்டை உறுதிப்படுத்திய பிறகு, அவர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட அந்த கடைத் திருடன், பின்னர் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சுவாவின் பணி சார்ந்த விழிப்புணர்வு அவரது நிறுவனத்தால் பாராட்டப்பட்டது. “ஜின் கீ, எங்கள் பயணிகளையும் சமூகத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பதில் உங்கள் விழிப்புணர்வு, தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி,” என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எனக்கு மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. ஆனால் அதே நேரத்தில், பாதுகாப்பை உறுதி செய்வது எனது கடமையின் ஒரு பகுதி என்பதை நான் உணர்கிறேன்,” என்று சுவா மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
எஸ்பிஎஸ்பாதுகாப்புவிழிப்புணர்வுஃபேஸ்புக்