கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் பிடோக் - தெம்பனிஸ் நிலையங்களுக்கு இடையிலும் தானா மேரா - எக்ஸ்போ நிலையங்களுக்கு இடையிலும் நவம்பர் 29 முதல் டிசம்பர் 8 வரை கட்டுமானப் பணிகள் இடம்பெறவுள்ளன.
அதனால், அந்த நாள்களில் அந்த நிலையங்களுக்கு இடையே ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படும்.
இதனையடுத்து, பயணிகளுக்காக இடைவழிப் பேருந்துச் சேவைகள் வழங்கப்படும் என்று பொதுப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எண் 7 இடைவழிப் பேருந்து பிடோக், தானா மேரா, சீமெய், தெம்பனிஸ் நிலையங்களுக்கு இடையே, மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும்.
அதுபோல, எண் 10 இடைவழிப் பேருந்தானது பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை பிடோக், தானா மேரா, எக்ஸ்போ நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும்.
ரயில் பயணங்களுக்குரிய அதே கட்டணம் இடைவழிப் பேருந்துகளுக்கும் வசூலிக்கப்படும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்தது.
கிழக்கு-மேற்கு ரயில் பாதையிலிருந்து புதிய ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைந்த பணிமனைக்கான தண்டவாளத்தை இணைப்பதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக குறிப்பிட்ட அந்த எம்ஆர்டி நிலையங்கள் மூடப்படவிருக்கின்றன.
அந்த ஒருங்கிணைந்த பணிமனையை 2026ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேல்விவரங்களுக்கு 1800-336-8900 என்ற எஸ்எம்ஆர்டி வாடிக்கையாளர் சேவை நேரடி அழைப்பு எண்ணில் காலை 7.30 மணியிலிருந்து இரவு 8 மணிக்குள் தொடர்புகொள்ளலாம் அல்லது www.smrt.com.sg என்ற இணையத்தளத்தை நாடலாம்.

