சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) குழுமத்தின் அண்மைய காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தில் அதற்குள்ள 25.1 விழுக்காட்டு பங்குகளைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதா என்பது குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.
இந்திய-பாகிஸ்தான் போரினால் வான்வெளிப் பாதைகள் மூடப்பட்டது, அகமதாபாத் போயிங் விமான விபத்து, ஈரான் போர், அமெரிக்காவின் ‘எச்1-பி’ விசா கெடுபிடிகள் எனப் பல சவால்கள் ஏர் இந்தியாவைப் பாதித்துள்ளன.
2025-2026 நிதியாண்டில் அந்நிறுவனம் $3.6 பில்லியன் வெள்ளி (US$2.8 மில்லியன்) இழப்பைச் சந்தித்த போதிலும், அதன் நீண்டகால மாற்றத்தைக் கருத்தில்கொண்டு செயல்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
“ஏர் இந்தியாவின் மாற்றத்தை 5 முதல் 10 ஆண்டுகளுக்கான நெடிய பயணமாகவே பார்க்க வேண்டும். வரலாற்றில் அனைத்துச் சிறந்த விமான நிறுவனங்களும் பல ஆண்டு காலங்களில்தான் உருவாக்கப்பட்டனவே தவிர, சில காலாண்டுகளில் அல்ல,” என்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் குழுமத்தின் ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“இவ்விவகாரம் முழு நிர்வாகக் குழுவின் நேரடிக் கவனத்தில் உள்ளது,” என்று முதலீட்டாளர்களின் கவலைகள் குறித்துப் பேசிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைவர் பீட்டர் சீ உறுதியளித்தார்.
தற்போதைய நிலவரப்படி, ஏர் இந்தியாவிற்கான எஸ்ஐஏ குழுமத்தின் முதலீட்டு மதிப்பு முந்தைய ஆண்டின் $2 பில்லியனிலிருந்து $1.1 பில்லியனாகக் குறைந்துள்ளது.
எனினும், உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானச் சந்தையைக் கொண்டுள்ள இந்தியாவில் கால்பதித்துள்ள ஒரே வெளிநாட்டு நிறுவனம் எஸ்ஐஏ.
சிங்டெல் பாரதி ஏர்டெல் நிறுவனத்திலும், டிபிஎஸ் வங்கி லக்ஷ்மி விலாஸ் வங்கியிலும் முதலீடு செய்து நீண்டகால நோக்கில் வெற்றி கண்டதைபோல, ஏர் இந்தியாவின் சீரமைப்பிலும் பெரும் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.
தற்போது ஏர் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரியாக அனுபவமிக்க டெவோல்டே கெப்ரமரியாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
‘ஸ்கைடிராக்ஸ்’ விருதுகளில் இந்நிறுவனம் நான்கு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
செயல்பாட்டு மாற்றங்கள் நிறைவடைய மேலும் 12 முதல் 18 மாதங்கள்வரை பொறுத்திருந்து நிலைமையை மதிப்பீடு செய்வது எஸ்ஐஏ குழுமத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று சந்தை வல்லுநர்கள் கருத்துரைத்துள்ளனர்.


