ஏர் இந்தியாவின் பாதுகாப்பில் எஸ்ஐஏ அதிக பங்களிப்பு

ஏர் இந்தியாவின் பாதுகாப்பில் எஸ்ஐஏ அதிக பங்களிப்பு

2 mins read
0d9a58d2-c1a5-4e9a-baaf-d4079b5c58e1
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), ஏர் இந்தியாவின் விமான இயக்கம், பொறியியல், பராமரிப்பு போன்ற முக்கியப் பிரிவுகளில் தனது ஊழியர்கள் சிலரை அமர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

புது டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் சந்தித்து வரும் கடுமையான நிதி இழப்புகள், பாதுகாப்பு குறைபாடுகளைத் தொடர்ந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் தனது பங்களிப்பை அதிகரித்துள்ளது.

ஏர் இந்தியாவின் 25.1 விழுக்காடு பங்குகளை வைத்துள்ள எஸ்ஐஏ, அண்மைக்காலமாக விமான இயக்கம், பொறியியல், பராமரிப்பு போன்ற முக்கியப் பிரிவுகளில் தனது உயர் அதிகாரிகளை நியமித்து வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன.

செயலற்ற பங்குதாரராக இருந்த எஸ்ஐஏ, 2025ஆம் ஆண்டு நடந்த டிரீம்லைனர் விமான விபத்திற்குப் பிறகு, அந்நிறுவனத்தில் அதிக பங்களிக்கத் தொடங்கியுள்ளது.

ஏர் இந்தியாவின் 74.9 விழுக்காட்டு பங்குகளை வைத்திருக்கும் டாடா குழுமம் வணிகம், நிதி, தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளில் கவனம் செலுத்த, சிறுபான்மைப் பங்குதாரரான எஸ்ஐஏ விமானப் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பப் பிரிவுகளைக் கையாள்கிறது.

“சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஏர் இந்தியாவில் குறிப்பிடத்தக்க சிறுபான்மை பங்குதாரரானது முதல், ஏர் இந்தியாவின் உருமாற்றத் திட்டத்திற்கு ஆதரவளிக்க, டாடா சன்ஸ் நிறுவனத்துடன் அணுக்கமாகப் பணியாற்றி வருகிறது,” என்று எஸ்ஐஏ செய்தித் தொடர்பாளர் புளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் வழி தெரிவித்துள்ளார். எனினும், ஏர் இந்தியாவின் நிதிநிலை, செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.

டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ், ஏர் இந்தியா ஆகியவற்றின் செய்தித் தொடர்பாளர்கள் மின்னஞ்சல் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்று புளூம்பெர்க் தெரிவித்தது.

2025ல் ஏர் இந்தியாவின் இழப்பு ஏறக்குறைய 2.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது எஸ்ஐஏ-வின் ஒட்டுமொத்த லாபத்தையும் பாதித்துள்ளதால், தனது முதலீட்டைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.

சான்றிதழ் இன்றி விமானங்கள் இயக்கப்பட்டது போன்ற ஒழுங்குமுறை விதிமீறல்கள் ஐரோப்பியக் கட்டுப்பாட்டாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

எஸ்ஐஏ தலைமை நிர்வாகி கோ சூன் போங்கும் டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரனும் ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி, அடுத்தகட்ட நிதியுதவி போன்றவை குறித்து மும்பையில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

பாகிஸ்தான் வான்பரப்பு மூடப்பட்டது, ஈரான் போர் போன்ற புவிசார் அரசியல் சூழல்களால் நீண்ட தூரப் பயணப் பாதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் விமான எரிபொருள் விலை உயர்வும் ஏர் இந்தியாவின் செலவுகளை அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்