ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரில் அக்டோபர் மாதம் திறக்கப்படவுள்ள புதிய விமான நிலையமான மேற்கு சிட்னி அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்களுக்கான பயணச்சீட்டுகளை விற்கத் தொடங்கிய முதல் விமான நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) ஆகும்.
மேற்கு சிட்னி விமான நிலையத்திற்கும் சாங்கி விமான நிலையத்திற்கும் இடையிலான தினசரி சேவைக்காக மார்ச் 25ஆம் தேதி அன்று பயணச்சீட்டுகளை எஸ்ஐஏ விற்கத் தொடங்கியது. சிங்கப்பூரிலிருந்து புறப்படும் முதல் விமானம் நவம்பர் 23ஆம் தேதி இயக்கப்படும்.
சிட்னியின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமாக அமையவிருக்கும் இந்த $5.3 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ($4.7 பில்லியன்) மதிப்பிலான விமான நிலையம், அக்டோபர் மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.
புதிய விமான நிலையத்தின் 24 மணி நேரச் செயல்பாட்டை எஸ்ஐஏ விமானங்கள் பயன்படுத்திக்கொள்ளும். மேற்கு சிட்னியிலிருந்து சிங்கப்பூருக்கான விமானம் இரவு 11.55 மணிக்குப் புறப்படும். சிங்கப்பூரிலிருந்து மேற்கு சிட்னிக்கான விமானம் காலை 11.30 மணிக்குப் புறப்படும். சிங்கப்பூரிலிருந்து சென்று திரும்பும் விமானங்களுக்கான அறிமுகக் கட்டணங்கள் S$806ல் இருந்து தொடங்குகின்றன.
சிட்னி பல்கலைக்கழகப் பேராசிரியரும் விமானப் போக்குவரத்து நிபுணருமான ரிகோ மெர்கர்ட், “புதிய விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் எஸ்ஐஏ விமானங்கள், மேற்கு சிட்னியில் வசிக்கும் மற்றும் சிங்கப்பூரை இடைவழிப் பயணமாகப் பயன்படுத்தக்கூடிய பெருமளவிலான தெற்காசிய மக்களைக் கவரக்கூடும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
மத்திய வர்த்தக வட்டாரத்திலிருந்து 44 கி.மீ. தொலைவில் உள்ள இந்தப் புதிய விமான நிலையம், பெரும்பாலும் மலிவுக் கட்டண விமான நிறுவனங்களுக்குச் சேவை செய்யும் என்றும், அதே சமயம் மத்திய வர்த்தக வட்டாரத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள சிட்னி கிங்ஸ்ஃபோர்ட்-ஸ்மித் விமான நிலையம், பெரிய விமான நிறுவனங்களையும் வர்த்தகப் பயணிகளையும் கவரும் என்றும் அவர் கூறினார்.
சிட்னி கிங்ஸ்ஃபோர்ட்-ஸ்மித் விமான நிலையத்திற்கு நாள்தோறும் இயக்கப்படும் நான்கு விமானங்களுடன் கூடுதலாகச் சேர்க்கப்படும் இந்தப் புதிய விமானங்கள், பயணிகளுக்கு ‘கூடுதல் தெரிவுகளையும் நீக்குப்போக்குத்தன்மையையும்’ வழங்கும் என்று எஸ்ஐஏ தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.
சுற்றியுள்ள குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் இரைச்சலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரு மணி நேரத்திற்கு 80 விமானங்களை மட்டுமே கையாள அனுமதிக்கப்பட்டுள்ளது சிட்னி கிங்ஸ்ஃபோர்ட்-ஸ்மித் விமான நிலையம்.
தொடர்புடைய செய்திகள்
56 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நகரின் அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யச் சிரமப்படும் அக்கறைகளைத் தொடர்ந்து, சிட்னியில் ஒரு புதிய விமான நிலையத்தைத் திறக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

