தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பனிப்பொழிவு: 10 மணி நேரம் தாமதமான எஸ்ஐஏ விமானம்

2 mins read
a36945e9-bc29-46f9-8adc-81f12cc1ebcb
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரிட்டனிலுள்ள மான்செஸ்டரை நோக்கி சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்சின் ‘எஸ்கியூ52’ விமானச் சேவை, லண்டனின் கெட்விக் விமான நிலையத்திற்குத் திசைதிருப்பப்பட்டது.

மான்செஸ்டரிலுள்ள விமான ஓடுபாதையில் பொழிந்த அதிகப்படியான பனி, இதற்குக் காரணம் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தபோது அது மீண்டும் லண்டனுக்குத் திரும்ப வேண்டியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வானிலை காரணமாக மான்செஸ்டர் விமான நிலையத்தின் ஓடுபாதை சுமார் 3.5 மணி நேரம் மூடப்பட்டது. பாரிஸ், டப்லின், கிலாஸ்கோ போன்ற மற்ற நகரங்களுக்குத் திருப்பப்படும் கட்டாயத்திற்குப் பல்வேறு விமானச் சேவைகள் உள்ளாகின.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.13 மணிக்குப் புறப்பட்ட விமானம், ஜனவரி 5ஆம் தேதியன்று மன்செஸ்டரில் தரையிறங்க வேண்டியிருந்தது. ஆயினும், அது லண்டனுக்குத் திருப்பப்பட்டு கெட்விக் விமான நிலையத்தில் காலை 9.48 மணிக்குத் தரையிறங்கியது.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் கெட்விக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம், இங்கிலாந்தின் மத்திய-வடக்குப் பகுதியிலுள்ள தேசிய பூங்கா ஒன்றின் மேல் கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு வட்டமிட்டு லண்டன் திரும்பியது.

இந்தப் பின்னடைவுகள் இருந்தபோதும் மன்செஸ்டரை அடைந்த விமானச் சேவை, பிரிட்டனின் நேரப்படி இரவு 7:11 மணிக்கு தரையிறங்கியதாக சிங்கப்பூர் ஏர்லைன்சின் இணையத்தளம் குறிப்பிட்டது.

முன்னதாகத் தீர்மானிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் 10 மணி நேரம் தாமதமாக விமானம் தரையிறங்கியுள்ளது.

கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேர இடைநிறுத்தத்திற்குப் பிறகு அந்தச் சேவை, அமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரத்திற்குச் செல்லவேண்டியிருந்தது.

இது குறித்து தமிழ் முரசு, சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் தொடர்புகொள்ள முற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்