மோசமான வானிலையால் பாத்தாமிற்குத் திருப்பிவிடப்பட்ட எஸ்ஐஏ விமானம்

மோசமான வானிலையால் பாத்தாமிற்குத் திருப்பிவிடப்பட்ட எஸ்ஐஏ விமானம்

1 mins read
18aa3c49-7b92-45cb-8aa1-2ee53ff92a2b
பாதிக்கப்பட்ட எஸ்கியூ851 விமானம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் தாமதமாகச் சிங்கப்பூரை வந்தடைந்தது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீனாவின் குவாங்சோவிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை (மே 5) சிங்கப்பூருக்குக் கிளம்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் மோசமான வானிலை காரணமாக இந்தோனீசியாவின் பாத்தாமிற்குத் திருப்பிவிடப்பட்டது.

எஸ்கியூ851 என்ற அவ்விமானம் உள்ளூர் நேரப்படி அன்றைய நாள் மாலை 5.41 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி மாலை 6.41 மணி) ஹாங் நாதிம் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது என்று வியாழக்கிழமை எஸ்ஐஏ பேச்சாளர் தெரிவித்தார்.

அவ்விமானத்தில் 301 பயணிகளும் 18 ஊழியர்களும் இருந்தனர். அவ்விமானம் மாலை 5.45 மணிக்குச் சிங்கப்பூரில் தரையிறங்குவதாக இருந்தது என்று ‘ஃபிளைட்ரேடார்24’ இணையத்தளத் தகவல் குறிப்பிட்டது.

பயணிகள் அனைவரும் அந்த போயிங் 787-10 விமானத்தினுள்ளேயே இருந்தனர் என்றும் அவர்களுக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது என்றும் எஸ்ஐஏ பேச்சாளர் கூறினார்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் பாத்தாமிலிருந்து புறப்பட்ட அந்த விமானம், இரவு 9.20 மணியளவில், ஏறக்குறைய நான்கு மணி நேரம் தாமதமாக சிங்கப்பூரை வந்தடைந்தது.

“இணைப்பு விமானங்களுக்கான மறுமுன்பதிவு, தங்குமிட வசதி உட்பட, பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டன,” என்று எஸ்ஐஏ பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட பயணிகளிடம் எஸ்ஐஏ நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்