சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), சிங்கப்பூருக்கும் பெல்ஜியத் தலைநகர் பிரசல்சுக்கும் இடையே விரைவில் நேரடி விமானச் சேவைகளை வழங்கவிருக்கிறது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அந்நகருக்கு மீண்டும் விமானச் சேவையை வழங்குகிறது.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி முதல் வாரத்தில் நான்கு இடைநில்லா விமானச் சேவைகள் வழங்கப்படும் என்று எஸ்ஐஏ தெரிவித்தது.
திங்கள், புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் எஸ்கியூ304 விமானம் சிங்கப்பூரில் இருந்து இரவு மணி 11.55க்கு புறப்படும்.
மறுவழியில் எஸ்கியூ303 விமானம், திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பிரசல்ஸ் நேரப்படி பிற்பகல் 12.10க்கு சிங்கப்பூர் நோக்கிக் கிளம்பும்.
செப்டம்பர் 13ஆம் தேதி முதல் அவற்றுக்கான பயணச்சீட்டுகளை வாங்க இயலும்.
தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இங்கிருந்து பிரசல்ஸ் செல்லும் பயணிகள், மியூனிக், ஃபிராங்ஃபர்ட், ஸூரிக் மூன்றில் ஏதாவதொரு நகரில் வேறு விமானத்திற்கு மாறவேண்டியுள்ளது.