சிங்கப்பூர் எர்லைன்ஸும் (எஸ்ஐஏ) இந்தோனீசியாவின் விமான நிறுவனமான கருடாவும் இணைந்து ஒரு வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.
அந்த ஒப்பந்தம் ஒருங்கிணைந்த விமான அட்டவணைகள் மற்றும் கட்டணங்கள் சார்ந்தது. இது தொடர்பான அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.
இது 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கையெழுத்தான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விரிவாக்கம் ஆகும்.
அந்த ஒப்பந்தம் சிங்கப்பூருக்கும் பாலி, ஜகார்த்தா, சுரபாயா போன்ற வழித்தடங்களுக்கும் விமானச் சேவை வழங்குவது தொடர்பானது.
ஒன்றிணைந்து பயணக்கட்டணம் தொடர்பான தயாரிப்புகள் மற்றும் பெருநிறுவனத் திட்டங்கள் உள்ளிட்ட புதிய முயற்சிகளை செயல்படுத்துவதும் அதில் அடங்கும்.
தென்கிழக்காசிய வட்டாரத்தில் விமான சேவையை விரிவுபடுத்த நினைக்கும் எஸ்ஐஏக்கு இது மிகப்பெரிய வெற்றி.
அதே நேரம் கொவிட்-19 ஏற்படுத்திய நிதி அழுத்தத்திலிருந்து மற்ற வட்டார விமான நிறுவனங்கள் மீண்டு வருகின்றன.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மலேசிய விமான நிறுவனத்துடனும், டிசம்பர் மாதம் தாய் ஏர்வேஸ் இன்டர்நேஷனலுடனும் எஸ்ஐஏ இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்தப் பங்காளித்துவம் எஸ்ஐஏயை தென்கிழக்கு ஆசியாவின் பிரதான விமான நிறுவனமாக உருவெடுப்பதை வலுப்படுத்துகிறது.
நிறையப் பயணிகள் எஸ்ஐஏ யின் நீண்ட தூரம் பயணிக்கும் விமானங்களின் மூலம் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்குச் செல்லமுடியும்.