ஆட்குறைப்பு செய்யப்படும் ஜெட்ஸ்டார் ஏஷியா ஊழியர்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) குழுமம் தனது விமானங்களில் வேலைகளை வழங்கும். இவற்றில் விமானிகளுக்கு 100 வேலைகளும் விமானச் சிப்பந்திகளுக்கு 200 வேலைகளும் அடங்கும்.
விமானப் போக்குவரத்துத் துறையில் தங்களது வாழ்க்கைத்தொழிலைத் தொடர்வதில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதே எஸ்ஐஏவின் இலக்கு என்று வெள்ளிக்கிழமை (ஜூன் 13) வெளியிட்ட ஓர் அறிக்கையில் அக்குழுமத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஜூலை 31ல் ஜெட்ஸ்டார் ஏஷியா அதன் சேவைகளை நிறுத்திக்கொள்வதால், 500க்கும் அதிகமான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவர் என்று புதன்கிழமை அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஆராய ஜெட்ஸ்டார் ஏஷியாவுடன் எஸ்ஐஏ குழுமம் அணுக்கமாகப் பணியாற்றி வருவதாக எஸ்ஐஏ பேச்சாளர் கூறினார்.
இந்த முயற்சியின் ஓர் அங்கமாக ஜூன் 17 முதல் 19 வரை எஸ்ஐஏ, ஸ்கூட் பிரதிநிதிகள் ஜெட்ஸ்டார் ஏஷியாவின் அலுவலகத்திற்குச் செல்லவுள்ளனர். விருப்பமுள்ள ஊழியர்களைச் சந்தித்து, கிடைக்கப்பெறும் வேலைகள் குறித்து அவர்கள் பேசவுள்ளதாக எஸ்ஐஏ பேச்சாளர் விவரித்தார்.
ஜெட்ஸ்டார் ஏஷியா ஊழியர்களை எஸ்ஐஏ குழுமத்துடன் இணைப்பது குறித்து தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆராய்ந்ததாக அதன் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் கூறியிருந்தார்.
ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்கள் தங்களது வேலை விண்ணப்பங்களை விரைவுபடுத்துவதற்கான தனி வழிகளைத் தான் அமைத்துள்ளதாக எஸ்ஐஏ குழுமம் முன்னதாகக் கூறியிருந்தது.

