சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 22ஆம் தேதி வரை, சிங்கப்பூர் - ஆம்ஸ்டர்டாம் இடையிலான தனது விமானச் சேவைகளின் எண்ணிக்கையை வாரத்துக்குப் பத்தாக அதிகரிக்கவுள்ளது.
தற்போது இந்த பயணப் பாதையில் நாள்தோறும் ஒரு விமானச் சேவை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆசிய-பசிபிக் நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்ஐஏ நிறுவனம் திங்கட்கிழமையன்று (மே 25) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்படி கூடுதலாக இயக்கப்படும் ‘எஸ்கியூ 334’ விமானம், சிங்கப்பூரிலிருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 11.10 மணிக்குப் புறப்படும்.
அதே நாள்களில் ஆம்ஸ்டர்டாமிலிருந்து நெதர்லாந்து நேரப்படி இரவு 8.35 மணிக்குச் சிங்கப்பூர் நோக்கி அது புறப்படும். இந்தக் கூடுதல் சேவைகளுக்கு ‘ஏர்பஸ் ஏ350-900’ ரக பயணிகள் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று எஸ்ஐஏ குறிப்பிட்டுள்ளது. இவற்றுக்கான பயணச்சீட்டு விற்பனை மே 25 முதல் தொடங்கியுள்ளது.
மேலும், அண்மையில் மான்செஸ்டர், மிலான், மியூனிக், லண்டன் போன்ற பிற ஐரோப்பிய நகரங்களுக்கும் தனது சேவைகளை அதிகரித்துள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், வரும் அக்டோபர் மாதம் முதல் மட்ரிட் நகரத்துக்கான புதிய விமானச் சேவையையும் தொடங்கவுள்ளது.

