சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (எஸ்ஐஏ) மார்ச் 29 முதல் இலங்கைத் தலைநகர் கொழும்புக்குச் செல்ல கூடுதல் விமானச் சேவைகளை வழங்கவுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, மார்ச் 29 முதல் ஏப்ரல் 30 வரை கொழும்பு நகருக்கு வாரத்திற்கு 10 விமானங்களை எஸ்ஐஏ இயக்கவுள்ளது. அத்துடன், மே 1 முதல் அக்டோபர் 24 வரை, ஒரு நாளைக்கு இரண்டு என விமானங்களின் எண்ணிக்கை வாரத்திற்கு 14ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைப் பருவத்தில் கூடுதல் பயணிகளை ஈர்க்கவும் உலக நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்குக் கூடுதல் தெரிவுகளை வழங்கும் நோக்கத்துடனும், உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களுக்கான விமானச் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று புதன்கிழமை (ஜனவரி 28) வெளியிட்ட அறிக்கையில் எஸ்ஐஏ கூறியுள்ளது.
எனவே, தற்போதைய அறிவிப்பின்படி மார்ச், அக்டோபர் மாதங்களுக்கு இடையில், பேங்காக், யங்கூன், சுரபாயா, தைவான் போன்ற பிரபலமான ஆசிய நகரங்களுக்கான விமானங்களின் எண்ணிக்கையை எஸ்ஐஏ அதிகரிக்கவுள்ளது.
அவ்வகையில், சிங்கப்பூரிலிருந்து பேங்காக்கிற்கு நாள்தோறும் ஒரு விமானம் கூடுதலாக இயக்கப்படும். அதனால், தாய்லாந்துத் தலைநகருக்கு அன்றாடம் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரிக்கும்.
மற்றுமோர் அம்சமாக, இந்தோனீசியாவின் சுரபாயாவிற்கு வாரத்திற்கு 19 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை 21ஆக மாறவும் புதிய அறிவிப்பு வகைசெய்யவுள்ளது.
மார்ச் 31 முதல் அக்டோபர் 24 வரையில் மியன்மார் தலைநகர் யங்கூனுக்குச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, அந்த வான்வழித்தடத்தில் ஒவ்வொரு வாரமும் கூடுதலாக மூன்று விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
இதன்மூலம் அந்த வழித்தடத்தில் செல்லும் மொத்த வாராந்தர விமானங்களின் எண்ணிக்கை 10ஆக உயரவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இவற்றுடன், மார்ச் 29 முதல் மே 31 வரை ஒவ்வொரு வாரமும் தைவானுக்குப் பறக்கவுள்ள எஸ்ஐஏ விமானங்களின் எண்ணிக்கையும் நான்கு மடங்காக உயர்ந்து, மொத்த வாராந்தர விமானங்களின் எண்ணிக்கை 18ஐத் தொடும்.
ஆசிய நகரங்களைத் தவிர, மார்ச் 29 முதல் மே 31 வரை எஸ்ஐஏ 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வடக்கு ஆஸ்திரேலிய நகரமான கெய்ர்ன்ஸ் மற்றும் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவிற்கான வழித்தடங்களையும் மாற்றியமைக்கவுள்ளது.
கெய்ர்ன்சுக்கு தற்போது நான்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், புதிய அறிவிப்பின்படி, ஜூலை 7 முதல் செப்டம்பர் 22 வரை வாரத்திற்கு ஐந்து முறை அந்நகருக்கு விமானங்கள் இயக்கப்படும் .
மேலும், ஜூலை 1 முதல் செப்டம்பர் 3 வரை, பார்சிலோனாவிற்கு வாரத்திற்கு ஐந்து நேரடி விமானங்களை எஸ்ஐஏ இயக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

