தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்றுக் கொந்தளிப்பு குறித்த தரவுப் பகிர்வு தளத்தில் எஸ்ஐஏ இணைந்தது

2 mins read
ffc4d47e-1d69-4e17-a167-0e57b6bd3b91
2024ல் இதுவரை Turbulence Aware தளத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உட்பட ஆறு விமான நிறுவனங்கள் இணைந்துள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜெனீவா: காற்றுக் கொந்தளிப்பு குறித்து நிகழ்நேர தரவுகளைப் பரிமாறிக்கொள்ள, 25க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் இடம்பெறும் உலகளாவிய தளம் ஒன்றில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) சேர்ந்துள்ளது.

காற்றுக் கொந்தளிப்பு உள்ள பாதைகளைத் தவிர்க்க விமானிகளுக்கு மேலும் ஒரு வழியை இந்த ஏற்பாடு அமைத்துத் தரும்.

மியன்மார் ஆகாயவெளியில் லண்டன் - சிங்கப்பூர் எஸ்ஐஏ விமானம் ஒன்று கடுமையான காற்றுக் கொந்தளிப்பை எதிர்கொண்டு ஐந்து மாதங்களான நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அச்சம்பவத்தில் பயணி ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமுற்றனர்.

அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் (Iata) காற்றுக் கொந்தளிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அந்தத் தளத்தில் (Turbulence Aware) அண்மையில் பதிவுசெய்துகொண்ட நான்கு விமான நிறுவனங்களில் எஸ்ஐஏவும் அதன் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஸ்கூட்டும் அடங்கும்.

தென்கொரியாவின் ஏஷியான ஏர்லைன்சும் பிரிட்டிஷ் ஏர்வேசும் இதர இரு விமான நிறுவனங்கள் என சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்த உலகளாவிய ஊடக தின நிகழ்வில் சங்கம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) இதனை அறிவித்தது.

2024ல் இதுவரை இந்தத் தளத்தில் ஆறு விமான நிறுவனங்கள் இணைந்துள்ளன. ஹாங்காங்கின் கேத்தே பசிபிக்கும் துபாயைச் சேர்ந்த எமிரேட்சும் இவ்வாண்டு முன்னதாக இதில் சேர்ந்திருந்தன.

இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த எஸ்ஐஏ பேச்சாளர் ஒருவர், நவம்பர் 1 முதல் Turbulence Aware தளத்தை எஸ்ஐஏ பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். இதன்மூலம் நிகழ்நேர தரவுகளைப் பயன்படுத்தும் அதன் விமானிகளால் காற்றுக் கொந்தளிப்பு உள்ள பயணப் பாதைகளைத் தவிர்க்கத் திட்டமிட முடிகிறது.

2019ல் வெறும் இரண்டு விமான நிறுவனங்களுடன் தொடங்கப்பட்ட இந்தத் தளம், இப்போது 25க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் 2,600க்கும் அதிகமான விமானங்கள் காற்றுக் கொந்தளிப்பு குறித்து தகவல் தெரிவித்துள்ளன. இது, உலகம் முழுவதும் உள்ள 35,000 விமானங்களின் எண்ணிக்கையில் ஏறத்தாழ 7 விழுக்காடு.

இதுவரை இந்தத் தளத்திற்கு, காற்றுக் கொந்தளிப்பு குறித்து 180 மில்லியனுக்கும் அதிகமான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்