இவ்வாண்டு ஜூன் 11ஆம் தேதிமுதல் ஜூலை 19ஆம் தேதிக்குள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானங்களில் பயணம் செய்வோர் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளைப் பார்க்க முடியாமல் போய்விட்டதே என வருந்தத் தேவையில்லை.
அப்போட்டிகள் அனைத்தும் விமானத்திலேயே நேரடியாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கிரிஸ்வோர்ல்டு லைவ் டிவி’யின் ‘ஸ்போர்ட் 24’ ஒளிவழி வழியாக ஒளிபரப்பப்படும் அனைத்துலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளும் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், பிபிசி செய்தி வழியாக மற்றச் செய்திகளையும் வணிக நிலவரங்களையும் தெரிந்துகொள்ளலாம் என்று எஸ்ஐஏ செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
எஸ்ஐஏவின் அனைத்து போயிங் 787-10, போயிங் 737-8 விமானங்களிலும், எட்டு போயிங் 777-300இஆர் விமானங்களிலும், 41 ஏர்பஸ் ஏ350-900 விமானங்களிலும் இச்சேவை வழங்கப்படும்.
நேரடி ஒளிபரப்பானது செயற்கைக்கோள் செயலெல்லை, ஒளிபரப்பு நிறுவனத்தின் ஏற்பாடுகள், குறிப்பிட்ட வழித்தடங்களுக்கான ஒழுங்குமுறை அனுமதி ஆகியவற்றைப் பொறுத்தது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பயண அனுபவத்தைத் தொடர்ந்து மேம்படுத்த எஸ்ஐஏ கொண்டுள்ள கடப்பாட்டை இது காட்டுகிறது என்று அதன் வாடிக்கையாளர் அனுபவப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் இயோ ஃபீ டெய்க் குறிப்பிட்டார்.
கனடா, மெக்சிகோ, அமெரிக்கா நாடுகள் இணைந்து நடத்தும் 23வது உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரில் மொத்தம் 48 நாடுகள் போட்டியிடுகின்றன.

