சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் இந்தியாவின் மும்பை, டெல்லி நகரங்களுக்கான விமானச் சேவைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை சிங்கப்பூர் - மும்பை இடையிலான இருவழி அன்றாடச் சேவைகளும் (SQ424, SQ423) A380 வகை விமானங்களால் வழங்கப்படாது.
அதே ஆண்டு ஜூன் 23ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 27ஆம் தேதிவரை சிங்கப்பூருக்கும் டெல்லிக்கும் இடையிலான SQ406, SQ403 அன்றாடச் சேவைகளுக்கும் A380 வகை விமானங்கள் பயன்படுத்தப்படாது.
அதற்கு மாறாக, அச்சேவைகளுக்கு போயிங் 777-300ER வகை விமானங்கள் பயன்படுத்தப்படும்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 2025க்கான வடதுருவ கோடைக்காலத்திற்கான போக்குவரத்துத் தேவைக்குத் தயாராகி வருகிறது.
புகழ்பெற்ற இடங்களுக்கு அதிகமான விமானச் சேவைகளை வழங்கும் நோக்குடன் இதுபோன்ற சில மாற்றங்களை எஸ்ஜஏ அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி முதல் லண்டனின் கேட்விக் (Gatwick) விமான நிலையத்திற்கு நாள்தோறும் விமானச் சேவை வழங்கப்படும். தற்போது வாரம் ஐந்து முறை அச்சேவை வழங்கப்படுகிறது.
வியட்னாமின் ஹோ சி மின் நகருக்குத் தற்போது வாரத்திற்கு 19 விமானச் சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், 2025 மார்ச் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை நாள்தோறும் மூன்று விமானச் சேவைகள் வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
அதே காலகட்டத்தில், கம்போடியாவின் சியம் ரீப் நகருக்கான அன்றாட விமானச் சேவையும் ஒன்றிலிருந்து இரண்டாக உயர்த்தப்படும்.


