விமானப் பயணத்துறை கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்திலிருந்து தொடர்ந்து மீண்டுவரும் வேளையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) மட்டுமல்ல, ஒட்டுமொத்த விமானத் துறையுமே விமானக் கட்டணங்களை அதிகரித்த வண்ணம் உள்ளது.
எஸ்ஐஏ தலைமை நிர்வாகி கோ சூன் பொங் இவ்வாறு கூறினார்.
எஸ்ஐஏ தனிப்பட்ட முறையில் அதன் விமானப் பயணச்சீட்டுக் கட்டணங்களை நிர்ணயிப்பதில்லை என்றும் அவர் சொன்னார்.
ஒரே மாதிரியான சேவைகளை வழங்கும் மற்ற விமான நிறுவனங்கள் என்னென்ன வழங்குகின்றன என்பதை ஆராய்ந்து, கட்டணங்களில் அதிக வேறுபாடு இல்லாததை எஸ்ஐஏ உறுதிசெய்யும் என்றார் அவர்.
மலிவுக் கட்டண விமான நிறுவனமான ‘ஸ்கூட்’ஐ உள்ளடக்கும் எஸ்ஐஏ குழுமம், இவ்வாண்டின் முதல் பாதியில் $1.44 பில்லியன் நிகர லாபம் ஈட்டியது. ஓராண்டுக்கு முன்னர் அதே காலகட்டத்தில் பதிவான $927 மில்லியனைக் காட்டிலும் இது 55 விழுக்காடு அதிகம்.
அடுத்தாண்டு மார்ச் இறுதிவரையிலான இரண்டு காலாண்டுகளில் விமானப் பயணத்திற்கான தேவை தொடர்ந்து நல்ல நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எஸ்ஐஏ குழுமம் தெரிவித்தது.