எஸ்கியூ321 விமானம் சிங்கப்பூர் திரும்பியுள்ளது

எஸ்கியூ321 விமானம் சிங்கப்பூர் திரும்பியுள்ளது

2 mins read
e6e70478-8844-4f40-a38e-9faf459ab808
காற்றுக் கொந்தளிப்பால் கடுமையாகக் குலுங்கிய எஸ்ஐஏ விமானம், மே 25ஆம் தேதி பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் தரையிறங்கியது. - படம்: சாவ்பாவ்

மோசமான காற்றுக் கொந்தளிப்பால், மே 21ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம், பேங்காக்கிலிருந்து புறப்படுவதற்கு அனுமதி பெற்ற பிறகு மே 26ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பியுள்ளது.

போயிங் 777-300இஆர் ரக விமானமான அது, மே 26ஆம் தேதி பேங்காக்கிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 1.39 மணிக்கு இங்கு தரையிறங்கியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்த எஸ்ஐஏ பேச்சாளர் இவ்வாறு கூறினார்.

“எஸ்ஐஏ, சிங்கப்பூரிலும் தாய்லாந்திலும் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து தேவையான ஒப்புதல்களுடன், பொறியியல், விமானச் சேவை குழுவினரிடமிருந்து புறப்படுவதற்குமுன் அனுமதி பெற்றது,” என்றார் அவர்.

மே 21ஆம் தேதி நடந்த சம்பவம் குறித்த விசாரணையில் அதிகாரிகளுடன் எஸ்ஐஏ முழுமையாக ஒத்துழைப்பதாக அவர் கூறினார்.

நடுவானில் நிகழ்ந்த விபரீதத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

லண்டன் நகரில் இருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்குப் பிறகு, மியன்மாரின் ஐராவதி பகுதிக்கு மேலே பறந்தபோது காற்றுக் கொந்தளிப்பால் எஸ்கியூ321 ரக விமானம் கடுமையாகக் குலுங்கியது.

அதனைத் தொடர்ந்து, மருத்துவ அவசர நிலையை அறிவித்த விமானி, 211 பயணிகளையும் 18 ஊழியர்களையும் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த விமானத்தை பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு அவசரமாகத் திருப்பிவிட்டார்.

அந்த எஸ்கியூ321 ரக விமானத்தில் 41 சிங்கப்பூரர்கள் இருந்தனர்.

எஞ்சிய 170 பயணிகள், ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

உயிரிழந்த பயணி, பிரிட்டனைச் சேர்ந்த 73 வயது ஜியோஃப் கிட்சன் என்று அடையாளம் காணப்பட்டார்.

இந்நிலையில், விமானத்தின் 41 பயணிகள் இன்னமும் பேங்காக்கில் உள்ள மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் சிங்கப்பூரர் எவரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்