சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (எஸ்ஐஏ), 2026ஆம் நிதியாண்டிற்கான லாபப் பகிர்வு போனசாக தகுதியுள்ள ஊழியர்களுக்கு 5.7 மாத ஊதியத்தை வழங்க உள்ளது.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் வியாழக்கிழமை (மே 14) நடைபெற்ற விழாவில் இதனை அறிவித்ததாக பிஸ்னஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.
கடந்த 2024, 2025 நிதியாண்டுகளில் முறையே 7.94, 7.45 மாதங்களாக இருந்த போனஸ் தொகையைவிட இது சற்று குறைவாகும். 2023ல் 6.65 மாத போனசை எஸ்ஐஏ வழங்கியது.
தொழிற்சங்கங்களுடன் ஏற்கெனவே எட்டப்பட்ட நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 2026ஆம் நிதியாண்டில் அந்நிறுவனத்தின் லாபம் 53.6 விழுக்காடு சரிந்து $945.5 மில்லியனாகக் குறைந்துள்ளது. இதற்கு கணக்கியல் ரீதியிலான ஆதாயங்கள் இல்லாததே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிகரித்து 18,233 ஆக உயர்ந்துள்ள நிலையில், பணியாளர் செலவினமும் $3.9 பில்லியனாக அதிகரித்துள்ளது.
லாபம் குறைந்திருந்தாலும், ஊழியர்களின் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் இந்த போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது இணையத்தளம் வாயிலாக விமானப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குத் தொடர்ந்து ஆட்களைத் தேர்வு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

